மேலும்

3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்ட அறிக்கையைத் தயாரிக்கிறது இந்தியா

பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை இந்திய விமான நிலைய அதிகாரசபை  தயாரிக்கும்.

இதுதொடர்பான உடன்படிக்கையில், இந்திய விமான நிலைய அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனில் குப்தாவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் வங்காள விரிகுடா நாடுகளுக்கான இணைச் செயலர் சஞ்சய் பாண்டாவும் அண்மையில் கையெழுத்திட்டுள்ளனர்.

அனைத்து தொழில்நுட்ப மற்றும் காரணிகளையும் உள்ளடக்கியதாக இந்த விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்திய விமான நிலைய அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில், விமான நிலைய அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவம் தொடர்பான தமது ஆற்றலும், நிபுணத்துவமும், உலகளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *