மேலும்

ஜப்பானின் இரண்டு அதிவேக ரோந்துப் படகுகள் சிறிலங்கா கடலோரக் காவல்படையில் இணைகின்றன

ஜப்பானில் கட்டப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப் படகுகள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

கடல் மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ள இந்த அதிவேக ரோந்துக் கப்பல்கள் வரும் 29ஆம் நாள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படும்.

ஜப்பானின் 2.4 பில்லியன் ரூபா கொடையில் இந்தப் படகுகள் கட்டப்பட்டுள்ளன.

முறைப்படி கட்டளையிடுவதற்கு முன்னதாக, இந்தப் படகுகள் இரண்டும்  கடந்த சில வாரங்களாக பயிற்சி ஓட்டங்களில் ஈடுபட்டு வந்தன.

புதிய திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன், சிறிலங்கா கடலோரக் காவல்படையில் இணைத்துக் கொள்ளப்படும், நவீன ரோந்துப் படகுகள் இவையாகும்.

30 மீற்றர் நீளமும், 123 தொன் எடையும் கொண்ட இந்தப் படகுகள் 750 கடல் மைல் தொலைவு வரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபடும் திறன் கொண்டவை.

ரோக்கியோவின், சுமிடகாவா கப்பல் கட்டும் தளத்தில் இந்த ரோந்துப் படகுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்தப் படகுகளில், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இரண்டு எம்ரியூ இயந்திரங்களும், ஹமில்டன் நீரூந்து பொறிமுறையும், பொருத்தப்பட்டுள்ளன. இவை 27 கடல் மைல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை.

கடலில் எண்ணெய் கசிவு போன்ற மாசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான வசதிகளும் இதில் உள்ளன. 70 மீற்றர் தொலைவுக்கு நீரைப் பாய்ச்சும், தீயணைப்பு கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

ரோந்து, தேடுதல், மீட்பு, மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய இந்தப் படகுகளில், சுழியோடும் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட 15 மாலுமிகள் பணியாற்றுவர்.

சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள இந்த அதிவேக ரோந்துப் படகுகளுக்கு, FPV 501, FPV 502 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இவற்றில் FPV 501இன் கட்டளை அதிகாரியாக லெப்.கொமாண்டர் அபேவர்த்தனவும்,  FPV 502 இன் கட்டளை அதிகாரியாக லெப். கொமாண்டர் கே.எம்.பி.பெரேராவும் நியமிக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *