மேலும்

சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன.

போக்குவரத்து, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் இணைந்தே, பலாலி விமான நிலையத்தைப் புதுப்பிக்க 1.2 பில்லியன் ரூபாவைக் கோரி அமைச்சரவைப் பத்திரத்தை கூட்டாக முன்வைக்கவுள்ளன.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“இங்கு, குடிவரவு மற்றும் சுங்கப் பிரிவுகளுக்கான முனையங்களையும், அவற்றின் பணியாளர்களுக்கான விடுதிகளையும் அமைப்பதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் திட்டங்களை வரைகின்றனர்.

முதலில் பலாலி விமான நிலையத்தை ஒரு பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கும், பின்னர் அதனை ஏனைய நாடுகளுக்கான விமானங்களும் பயணம் மேற்கொள்ளும் வகையில், அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையே இந்த புதுப்பித்தல் நடவடிக்கைகளைக் கையாளவுள்ளது.” என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது பலாலி இராணுவ விமான நிலையம், 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள போதும், 750 ஏக்கர் காணியில் மாத்திரமே, விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என்று யாழ். மாவட்ட  மேலதிக செயலர் (காணிகள்) முரளிதரன் தெரிவித்துள்ளார்.

“விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான சாத்திய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் சனத்தொகை பாடசாலைகள், மின் இணைப்புகள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த விரிவான சாத்திய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலாலி விமானத் தளத்தில் மேலதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் ” என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று பேர் கொண்ட இந்திய விமானத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த வாரம் பலாலிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில், பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டம், கேள்வியின் அடிப்படையில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“பிராந்திய விமான நிலையத்தில் மிகப் பெரியளவு போக்குவரத்து இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து நாங்கள் அறிவோம். அதனால் தான் கட்டம் கட்டமாக விமான நிலைய அபிவிருத்தியை மேற்கொள்வதென முடிவு செய்திருக்கிறோம்.

இதற்கான சாத்திய ஆய்வுகள் பூர்த்தியடைந்துள்ள போதிலும், நிதியை ஒதுக்கீடு செய்யும் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை.

சிறிலங்கா விமானப்படையின் பரிந்துரைகளுடன், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டம், கட்டம் கட்டமாக பாரிய உட்கட்டமைப்பு முதலீடுகளைச் செய்வதன் மூலம் நியாயமான வருமானத்தை ஈட்ட முடியும் என்று கூறுகிறது.

அத்துடன், அந்த அறிக்கையில், A 320, A 321, B 737 போன்ற ரகங்களைச் சேர்ந்த, சுமார் 150 தொடக்கம் 180 பயணிகளை ஏற்றக் கூடிய, குறைந்தது இரண்டு நடுத்தர ஜெட் விமானங்களைக் கையாளும் வகையில், விமான நிலையத்தை முதற்கட்டமாக தரமுயர்த்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியிருந்தது. இதுதொடர்பாக இரண்டு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தன.

இந்தியாவின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் பரிந்துரைகள் சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டது.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 109 மில்லியன் டொலர் (11,312 மில்லியன் ரூபா) தேவைப்படும் என்றும், மூன்றரை ஆண்டுகளில் திட்டத்தை நி்றைவு செய்ய முடியும் என்றும் அந்தக் குழுவினால், மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியா ஏற்கனவே இணங்கிய கொடையைப் பயன்படுத்தி, விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவின் விமான நிலைய அதிகார சபை சம்பந்தப்பட்ட இந்தியா அதிகாரிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *