மேலும்

கடனைப் பெறுமாறு சிறிலங்காவை சீனா நிர்ப்பந்திக்கவில்லை

சீனாவிடம் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா நிர்ப்பந்திக்கப்படவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மேற்குலக ஊடகங்கள்,  மற்றும் அதிகாரிகள், சீனா கடன் பொறியைப் பயன்படுத்தி, முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை வசப்படுத்தி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வணிகப் பாதைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், சிறிலங்காவுக்கான சீன தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு,குளோபல் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில்,

“ இந்தத் திட்டத்துக்கான கடனை சிறிலங்காவே கேட்டது. இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா நிர்ப்பந்திக்கப்படவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீன நிதி, சிறிலங்காவின் கோரிக்கைக்கு அமையவே வந்தது.

சீனா கடன்பொறியை பயன்படுத்தி நாடுகளின் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்பது மிகவும் நியாயமற்ற குற்றச்சாட்டு.

இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுத்தது. இந்த முடிவு தவறானதாக இருந்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்னும் அதிகமான கப்பல்களும், முதலீடுகளும் தேவை. அதைவிட அந்தப் பகுதியில் ஒரு நல்ல கைத்தொழில் வலயத்தை உருவாக்கவும் நாம் விரும்புகிறோம்.

எனவே, சீன வணிக சமூகத்தை சிறிலங்காவுக்கு வந்து அந்தப் பகுதியில் ஒரு கைத்தொழில் தளத்தைக் கட்டியெழுப்புமாறு அழைப்பு விடுக்க விரும்புகிறோம்.

சீனாவுடன் பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள சிறிலங்கா விரும்புகிறது.

இந்தியா, அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகளுடனான ஒத்துழைப்புக்கும் சிறிலங்கா திறந்தே இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *