மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகம் – ஜப்பானுக்கு சிறிலங்கா அளித்துள்ள வாக்குறுதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த சிறிலங்கா அனுமதிக்காது என்று, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவிடம் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக, ஜப்பானிய செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்,  இட்சுனோரி ஒனோடெரா தமது உயர்மட்டக் குழுவுடன், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சுக்களை நடத்தினார்.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது, சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவினால் குத்தகைக்கு பெறப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், எல்லா நாடுகளுக்குத் திறந்து விடப்பட வேண்டும் என்பதில், இரண்டு நாடுகளின் உயர்மட்டங்களுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம்,  முக்கியமான கப்பல் வழிப்பாதையில் அமைந்துள்ளது என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த சிறிலங்கா அனுமதிக்காது என்று, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரிடம், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *