மேலும்

அம்பாந்தோட்டைக்குச் செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்,  இராணுவ ஒத்துழைப்புக் குறித்து பேச்சு நடத்துவார் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் சென்று பார்வையிடுவார் என்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்  இட்சுனோரி ஒனோடெரா நாளை ஆரம்பிக்கவுள்ளர்.  இவர், இரண்டு நாடுகளுடனும் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகளை வெளிப்படையாக எதிர்ப்பதற்கான  முயற்சியாக இது கருதப்படுகிறது.

ஐந்து நாட்கள் பயணத்தின் முதற்கட்டமாக இந்தியா செல்லும், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் பேச்சு நடத்துவார்.

ஜப்பானிய தரைப்படைக்கும், இந்திய இராணுவத்துக்கும் இடையில் முதலாவது  கூட்டுப் பயிற்சியை கூடிய விரைவில் ஆரம்பிப்பதற்கான உடன்பாட்டை எட்டும் இலக்குடன் இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படும்.

சிறிலங்காவில் அவர், பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பார். சிறிலங்கா கடற்படைக்கு மேலதிக உதவிகளை ஜப்பான் வழங்குவது குறித்து இதன் போது பேச்சுக்கள் நடத்தப்படும்.

அத்துடன் சீன நிறுவனத்தினால் இயக்கப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் செல்லவுள்ளார் என்றும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவும் ஜப்பானும், தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் எதிர் எதிர் நிலைகளில் இருக்கும் நிலையில், அம்பாந்தோட்டை மீது ஜப்பான் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *