மேலும்

மாநில அரசுகள் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பை தவிர்க்க வேண்டும் – இந்திய மத்திய அரசு

எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய நாடுகள் தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மத்திய உள்துறை அமைச்சு அண்மையில், மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அதில், எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டிய நாடுகளின் அமைப்புகளுடன் மாநில அரசுகள் நேரடியான தொடர்புகளை பேண வேண்டாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சின் அனுமதியுடனேயே தொடர்புகளைப் பேணுமாறும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டிய நாடுகள் என்ற வரையறைக்குட்பட்ட நாடுகளின் அமைப்புகள் உள்துறை அமைச்சின் அனுமதியின்றி மாநில அரசுகள் மற்றும் காவல்துறையுடன், நேரடியாகத் தொடர்பு கொள்வதாகவும், பயிற்சி, ஒத்துழைப்பு, கருத்துப் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, போன்றவற்றுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சட்டம் ஒழுங்கு விடயத்தில் அனைத்துலக ஒத்துழைப்பு முக்கியமானதெனினும், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில வெளிநாடுகளின் அமைப்புகளை எச்சரிக்கையுடனும், வரையறுக்கப்பட்ட எல்லையுடனும் அணுக வேண்டிய அவசியம் உள்ளது.

எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய நாடுகளின் அமைப்புகளிடம் இருந்து, மாநிலங்களின் காவல்துறைக்கு இத்தகைய கோரிக்கைகள் வரும் போது, மத்திய உள்துறை அமைச்சுடன் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தடயவியல் பயிற்சி, வெடிபொருட்கள், புலனாய்வு, ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளபாடங்கள் தொடர்பான கொள்வனவு என்று வரும் போது, சில நாடுகள் கவனமுடன் கையாளப்பட வேண்டியவை என்று மத்திய புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளன.

உள்நாட்டுப் பாதுகாப்பு விடயத்தில், சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியன எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியவையாகும்.

இந்த நாடுகளின் அரச மற்றும் தனியார் அமைப்புகளுடன் மாநில அரசுகள் மற்றும் காவல்துறை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் போது, அது உள்நாட்டுப் பாதுகாப்பு விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமளித்ததாகி விடும்.

பயங்கரவாத தடுப்பு, போலி நாணயத்தாள், போதைப் பொருள், ஆட்கடத்தல் போன்ற விடயங்களில் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டிய நாடுகளில் இலங்கை, ஈரான், ஈராக், பங்களாதேஷ், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகியன இடம்பெற்றுள்ளன.

அத்துடன் வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவில் நடத்தும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *