மேலும்

சிறிலங்கா அதிபரின் விடாப்பிடியால் தயானின் தூதுவர் பதவிக்கு அங்கீகாரம்

நீண்ட இழுபறிக்குப் பின்னர், ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலகவை நியமிப்பதற்கு, உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.

தயான் ஜயதிலகவின் நியமனத்தை அங்கீகரிப்பது தொடர்பாக, கடந்த ஜூலை 17ஆம் நாள்  நடந்த உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் கருத்து முரண்பாடு இருந்தது.

இதனால் நியமனத்தை அங்கீகரிக்காமல் மேலதிக  ஆய்வுக்காக பிற்போடப்பட்டது. நேற்றும் கூட உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு கூடிய போது தயான் ஜயதிலக தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த நியமனத்துக்கு எதிரான காரணங்களை தெரிவித்தனர்.

எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமன விடயத்தில் அழுங்குப் பிடியில் இருந்தமையால், நியமனத்துக்கு அனுமதி அளிக்க நாடாளுமன்றக் குழு முடீவு செய்தது.

முன்னதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த ஜூலை 17ஆம் நாள் தயான் ஜயதிலகவிடம் நேர்காணல் நடத்தியிருந்தது.

எனினும், தயான் ஜயதிலகவின் நியமனத்துக்கு எதிராக சிவில் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 115 பேர் கையெழுத்திட்டு எதிர்ப்பு மனுவொன்றை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு சமர்ப்பித்திருந்தனர்.

இதனால், தயான் ஜயதிலகவின் நியமனத்தை அங்கீகரிப்பதில் நாடாளுமன்றக் குழு இழுத்தடித்து வந்தது.

உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு, பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒப்பமிட்ட எதிர் மனுவொன்றைப் பெற்றது இதுவே முதல் முறையாகும்.

இதில் கையெழுத்திட்டவர்களில் பலர் பிரபலமானவர்கள் என்பதால், இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டது.

அத்துடன், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையிலும் இவர் முக்கிய பங்கு வகித்து வந்ததையும் நாடாளுமன்றக் குழு கவனத்தில் எடுத்திருந்தது.

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் நேற்றைய கூட்டத்தில், சபாநாயகருடன், அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க, லக்ஸ்மன் கிரியெல்ல, எரான் விக்கிரமரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ச, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், விஜித ஹேரத்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *