மேலும்

அர்ஜூன் அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றதை ஒப்புக்கொண்டார் தயாசிறி

மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியசின் வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து  தாம் 10 மில்லியன் ரூபாவைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர.

கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்து, அண்மையில் அதிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்ட 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜெயசேகர நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இதன்போதே, தாம் 10 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை, வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து   பெற்றதாக ஒப்புக் கொண்டார்.

2015 ஆம் ஆண்டு தேர்தல் செலவுகளுக்காகவே இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டேன். அதனைப் பெற்றுக் கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினரோ, அல்லது நாடாளுமன்ற கணக்காய்வுக் குழு உறுப்பினரோ அல்ல.

அது ஒரு பணக் காசோலை. எனக்கு முகவரியிடப்பட்டது அல்ல. அதில் பேர்ச்சுவல் ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் கையெழுத்திட்டிருந்தாரா அல்லது வேறெவரும் கையெழுத்திட்டிருந்தனரா என்று எனக்கு நினைவில்லை.

எனது தேர்தல் பரப்புரைக்காகவே அது  பயன்படுத்தப்பட்டது.

சிறிலங்கா அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவுகளுக்கு மாத்திரமன்றி, மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் கூட பரப்புரைக்காக வணிகர்கள் ஆதரவு வழங்குவது வழக்கமான நடைமுறை தான்.

அர்ஜூன் அலோசியசுடன் நெருக்கமான வணிகத் தொடர்புகள் இருப்பதை ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்.

2015 ஜூலை 13ஆம் நாளிடப்பட்ட அந்த காசோலை எனக்குத் தரப்பட்டது. வடமேல் மாகாண முதலமைச்சராக இருந்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலிலுக்காக அப்போது பரப்புரையில் ஈடுபட்டிருந்தேன்.

நாடாளுமன்ற கணக்காய்வுக் குழு உறுப்பினராக இருந்து கொண்டு ஒருபோதும் அர்ஜூன் அலோசியசை பாதுகாக்க முனையவில்லை.

அர்ஜூன் அலோசியசிடம் பலர் பணம் பெற்றிருக்கிறார்கள்.  பிணைமுறி மோசடி குறித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் 3000 பக்கங்கள் கொண்ட ஏனைய பக்கங்களை வெளியிட்டால், அவர்களின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வரும்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் எம்மீது சேற்றை வாருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *