மேலும்

நினைவேந்தலில் பங்கேற்ற அதிகாரிகளை பணிநீக்கிய வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரம்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கடந்த 18ஆம் நாள் நினைவு கூர்ந்த வங்கி அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து, குறித்த வங்கியில் கணக்குகளை வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பலரும், தமது கணக்குகளை மூடி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவு கூரப்பட்ட போது, கிளிநொச்சியில் உள்ள ஹற்றன் நசனல் வங்கியிலும், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுபற்றிய படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, வங்கி தலைமையகத்தினால், குறித்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் ஒரு பணியாளர் ஆகியோர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதற்காக வங்கி அதிகாரிகள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்த வங்கியின் செயற்பாட்டுக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புத் தோன்றியுள்ளது.

அத்துடன், குறித்த வங்கியில் உள்ள தமது கணக்குகளை மூடி, வாடிக்கையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

வங்கிக் கணக்கை மூடுவது பற்றி வங்கிக்கு தாம் எழுதிய கடிதம், சேமிப்பு கணக்கு மூடப்பட்டதை காட்டும் படங்கள், சேமிப்பு புத்தகத்தை கிழித்துப் போட்ட படங்களைப் பதிவேற்றி, பலரும் சமூக ஊடகங்களில் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வங்கியைப் புறக்கணிப்போம் என்ற போராட்டத்துக்கு  பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.

அதேவேளை, குறித்த வங்கியின் செயற்பாட்டுக்கு நேற்று நாடாளுமன்றத்தில் கண்டனம் வெளியிட்ட கூட்டமைப்பு உறுப்பினர் சிறீதரன், தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத குறித்த தனியார் வங்கி வடக்கு கிழக்கில் உள்ள கிளைகளை மூட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *