மேலும்

பாதுகாப்பு நிலைமைகள் குறித்த சிங்கள நாளிதழ்களின் செய்தி – சிறிலங்கா அதிபர் விசாரணைக்கு உத்தரவு

தேசிய பாதுகாப்புத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கரிசனை கொண்டிருப்பதாக, இரண்டு சிங்கள நாளிதழ்களில் நேற்று வெளியாகிய செய்தி தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘தேசிய நாளிதழ்களான, தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில், வெளியாகியுள்ள “சிவில் போராட்டங்களுக்கான பின்னணியை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்”, ”நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினர் அவதானத்துடன் உள்ளனர்” என்ற தலைப்புகளில் அமைந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.

இது யாரேனும் ஒரு நபர் அல்லது அமைப்பினால் உருவாக்கப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ஒரு பொய்யான செய்தியாகும்.

இத்தகைய பொய்யான செய்தியை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தவர் யார் என்பது பற்றி துரிதமான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயம் என்றே குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு விடயங்கள் தொடர்பாகவும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில்கலந்துரையாடப்படவில்லை என்றும் சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *