மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் முறை பெரும் தவறு – சிறிலங்கா அதிபர்

புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது மிகப் பெரிய தவறு என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

”இந்த அசாதாரணமான முறையினால், உண்மையில் உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் வெற்றி பெற்றவர்களால் அந்த சபைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது போயுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும், உள்ளூராட்சி நிர்வாகங்கள் உருவாக்கப்பட்டதும், மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், உள்ளூராட்சி சபைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில், உள்ளூராட்சித் தேர்தலில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

புதிய முறையின்படி, 4000 ஆக இருந்த உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை, 8000 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்தளவு உறுப்பினர்களை வைத்திருப்பதால் ஏற்படக் கூடிய செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைக்க வேண்டும்.

நான் அமைச்சரவையில் இதுபற்றிய திருத்தங்களை முன்மொழிவேன். அடுத்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சட்டத் திருத்தங்களைச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *