மேலும்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது – ஐ.நா நிபுணர்

Special Rapporteur Pablo de Greiffசிறிலங்காவில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது  என்று  உண்மை, நீதி, இழப்பீடு மற்றும்  மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்  பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அவர்,

“ 2015 ஆம் ஆண்டிலிருந்து நான் சிறிலங்காவுடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றேன். பல்வேறு பயணங்களை அங்கு நான் மேற்கொண்டிருக்கின்றேன்.

கடந்த ஆண்டும்   சிறிலங்காவுக்கு  சென்றிருந்தேன். அதுதொடர்பான எனது அறிக்கையை   எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்   ஜெனிவாவில் சமர்ப்பிப்பேன்.

எனக்கு  வழங்கிய ஒத்துழைப்புக்காக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும்  சிவில் சமூகத்திற்கும்   பாதிக்கப்பட்ட மக்களுக்கும்  இங்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

பழைய விடயங்கள் அனைத்தையும் இங்கு  நான் பேசவில்லை. மாறாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற  முஸ்லிம் சமூகத்தினர் மீதான தாக்குதல் குறித்து  சில விடயங்களை   முன்வைக்கின்றேன்.

2015 ஆம் ஆண்டு காணாமல்போனோர்,  காணி கள் விடுவிப்பு, தடுத்து வைத்தல், சித்திரவதைகள், வன்முறைகள், சிவில் சமூகம் மீதான கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட மக்களை கண்காணித்தல் போன்ற விடயங்கள் குறித்த பரிந்துரைகளை முன்வைத்திருந்தேன்.

இந்த விடயங்களில்  அதிகமானவை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

பரந்துபட்ட அளவிலான   நிலைமாறுகால நீதி   குறித்த  பொறுப்புக்கூறல் பொறிமுறையை  முன்னெடுக்க வேண்டுமென   நான்  ஏற்கனவே  பரிந்துரை முன்வைத்திருக்கின்றேன்.

குறிப்பாக  2015 ஆம் ஆண்டு  ஐ.நா மனித  உரிமைகள் பேரவையில்  நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தின் கீழ் இந்தப் பொறுப்புக்கூறல் பொறிமுறை  முன்னெடுக்கப்பட வேண்டியது    அவசியம்.

காணாமல்போனோர் பணியணத்துக்கு  ஆணையாளர்களை நியமித்துள்ளமை  எதிர்பார்ப்பிற்கான ஒரு சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளது.  அதில் சில கேள்விகளும் காணப்படுகின்றன.  குறிப்பாக   தாமதமும் காணப்படுகின்றது.

இந்த பணியகம் தொடர்பில்  ஈடுபாட்டுடன் செயற்படுமாறு நான் அனைத்துத் தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

காணாமல்போனோர்  பணியகமானது ஒரு  ஆரம்பம் மட்டுமேயாகும்.

சிறிலங்காவில்   அனைத்து  சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை  ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால்   சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன.

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.  ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *