கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள் (படங்கள்)
கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது.
கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வானில் கரும்புகை மூட்டம் காணப்படுகிறது.
வன்முறைக் கும்பலைக் கலைக்க, சிறிலங்கா இராணுவத்தினர் பொல்லுகளுடன் துரத்திச் செல்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களை அமைதியாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம், முஸ்லிம் தலைவர்கள் கோரி வருகின்றனர்.
நாளை மாலை வரை ஊரடங்கு
இதற்கிடையே கண்டி மாவட்டத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கு விரைந்தார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு விரைந்து சென்றுள்ளார். அவர் அமைதியை ஏற்படுத்துவது குறித்து மதத்தலைவர்கள், ஆயுதப்படையினருடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
விடுமுறைகள் ரத்து
சிறிலங்கா காவல்துறையினர் அனைவரினதும் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.