மேலும்

அமெரிக்காவின் ஜிஎஸ்பி சலுகை இழப்பினால் பெரிய தாக்கம் இல்லை என்கிறது சிறிலங்கா

harsha d silvaஅமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை இழப்பு சிறிலங்காவின் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாது என்று, சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா உள்ளிட்ட 120 நாடுகளுக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகையை அமெரிக்க காங்கிரஸ் நீடிக்கவில்லை. இதனால், நாளையுடன் இந்த நாடுகள் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளின் போது பெற்று வந்த வரிச்சலுகையை இழக்கவுள்ளன.

இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா,

“அமெரிக்காவின் ஜிஎஸ்பி சலுகை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜஎஸ்பி பிளஸ் சலுகை ஆகியன தொடர்பாக பலரும் குழப்பமடைந்துள்ளனர்.

2016இல் அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதி 2.8 பில்லியன் டொலராகும். இதில், 173 மில்லியன் டொலர் பெறுமதியான, சுமார் 6.2 வீதமான ஏற்றுமதியே ஜிஎஸ்பி சலுகைத் திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இதில் ஆடை ஏற்றுமதி, சுமார் ஒரு வீதம் (27 மில்லியன் டொலர்) மாத்திரமே. எனவே ஜிஎஸ்பி சலுகை இழப்பு நாட்டின் ஏற்றுமதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

அமெரிக்காவின் ஜிஎஸ்பி திட்டத்தின் கீழ் இறப்பர் பொருட்கள் தான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நாட்டின் மொத்த ஏற்றுமதி 11,000 மில்லியன் டொலர்களாக இருக்கும் நிலையில், 173 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் தான் அமெரிக்காவுக்கு ஜிஎஸ்பி சலுகைத் திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது ஒரு பெரிய தொகை அல்ல. இந்த இழப்பு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் ஜிஎஸ்பி சலுகையை விட, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டமே, மிகவும் முக்கியமானது. 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதிகளைச் செய்வதற்கு சிறிலங்கா உள்ளிட்ட 9 நாடுகளுக்கே ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை 10 தொடக்கம் 20 வீதம் வரை கிடைக்கிறது. 2016இல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் ஏற்றுமதி 3.1 பில்லியன் டொலராக இருந்தது.

இதில் 2 பில்லியன் டொலர் பெறுமதிக்கு ஆடைகளே ஏற்றுமதி செய்யப்பட்டன.

எம்மால் ஜிஎஸ்பி பிளஸ்“ சலுகையைத் தொடர்ந்து பெற முடிந்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகையினால், சிறிலங்காவின் மீன் ஏற்றுமதி அண்மையில் 47 வீதம் அதிகரித்துள்ளது. எனவே இது தான் முக்கியமானது.

ஜிஎஸ்பி சலுகையைப் பெற்று வந்த சிறிலங்கா உள்ளிட்ட 120 நாடுகள், அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளின் போது, அடுத்த ஆண்டு தொடக்கம் செலுத்த வேண்டிய தொகை 3 வீதத்தினால் அதிகரிக்கும்.

ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஐ.நா வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகளும் கூட, அமெரிக்காவின் இந்தச் சலுகையை இழந்துள்ளன.

இது அமெரிக்காவின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், ஜிஎஸ்பி சலுகை தொடர்பாக அமெரிக்காவுடன் அரச மட்டத்திலான பேச்சுக்களை நடத்த வேண்டிய தேவை இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *