மேலும்

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கிறது சிறிலங்கா – அதிர்ச்சியுடன் தொடங்கும் புத்தாண்டு

eagle-flag-usaபுத்தாண்டு சிறிலங்காவுக்கு அதிர்ச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை சிறிலங்கா 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளில் இருந்து இழக்கவுள்ளது.

சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்காவில் கிடைத்து வந்து ஜிஎஸ்பி வரிச்சலுகை நாளையுடன் காலாவதியாகவுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டில் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகையை அமெரிக்கா காங்கிரஸ் மீளப் புதுப்பிக்காத நிலையில், சிறிலங்கா இந்தச் சலுகையை இழக்கவுள்ளது.

சிறிலங்காவின் பிரதான ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்காவே விளங்குகிறது. 2016ஆம் ஆண்டில், அமெரிக்காவுக்கு, 2.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்றும், அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2.5 பில்லியன் டொலர் பொருட்களில், கிட்டத்தட்ட 7 வீதம் அல்லது,  179 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் ஜிஎஸ்பி திட்டத்தின் கீழேயே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஜெரூசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக ஐ.நாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தமக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

எனினும், அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட 128 நாடுகள் ஐ.நாவில் வாக்களித்திருந்தன. 9 நாடுகள் மாத்திரமே அமெரிக்காவை ஆதரித்திருந்தன.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இந்த வாக்கெடுப்பு, அமெரிக்காவின் பில்லியன் கணக்கான டொலர் உதவிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தார்.

எனினும், ஐ.நா வாக்கெடுப்புக்கும், ஜிஎஸ்பி வரிச்சலுகையை நீடிப்பதில்லை என்று அமெரிக்க காங்கிரசின் முடிவுக்கும் தொடர்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *