மேலும்

சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா?

sri-lanka-army2009ல் சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததில் , இருந்து, சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டிய தேவையுள்ளதாகக் விவாதிக்கப்பட்டது.

நல்லாட்சியை நிலைநிறுத்துவதாகக்கூறி ராஜபக்ச அரசாங்கத்தைத் தோற்கடித்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது நாட்டின் பாதுகாப்புத் துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என வாக்குறுதி வழங்கியதன் மூலம் இது தொடர்பான விவாதமானது மீண்டும் தூண்டப்பட்டது.

பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியதன் தேவையை பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர். என்னைப் போன்ற பொதுமக்கள் வடக்கு கிழக்கானது இராணுவ மயமாக்கலிலிருந்து முற்றுமுழுதாக விடுவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் நாட்டை ஆட்சி செய்பவர்கள் பாதுகாப்புச் செலவீனத்தைக் குறைக்க முடியாது என வலியுறுத்தியுள்ளனர்.

பாதுகாப்புத் துறையில் ஏற்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சியாகும் என முன்னாள் அதிபரும் குருநாகல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் வாதிடுகின்றனர்.

ஆகவே சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில்   எவ்வாறான மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன என்பது தொடர்பாக எவரும் பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள நாட்டின் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடமும் அபிப்பிராயங்கள் கேட்கப்பட்டால், அவர்கள் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான தமது கருத்துக்களைத் தெரிவிக்க முடியும்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் பாதுகாப்புத் துறையானது பாரியளவில் கட்டியெழுப்பப்பட்டது. பாதுகாப்புத் துறையில் 200,000 இராணுவ வீரர்கள் காணப்பட்டனர். 2009ல் பாதுகாப்புத் துறைக்காக 175 பில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டன.  மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சமாதான காலத்தில் சிறிலங்கா பாதுகாப்புப் பிரிவில் மிக அதிகளவிலான இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றின் மத்தியிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் பாதுகாப்புத் துறைக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் எவ்வித சீர்திருத்தங்களும் இடம்பெறவில்லை என 2009-2015 வரையான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. மகிந்த ராஜபக்ச தேவைக்கும் அதிகமான இராணுவத்தினரை வைத்திருப்பதால் பொதுமக்களின் நிதி விரயமாக்கப்படுவதாகவும் இதனால் 2009லிருந்து பாதுகாப்புத் துறைக்கான செலவீனத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இது தொடர்பான எனது கருத்துக்களை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

அதாவது ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தார் என நான் நம்புகிறேன். அதாவது இவர் தனது ஆட்சிக்காலத்தின் போது பாதுகாப்புப் படையினரை நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியிருந்தார்.

அத்துடன் இவரது ஆட்சிக்காலத்தில் இராணுவப் பொறியியல் பிரிவினர் நாட்டின் மிகப் பாரிய கட்டுமானத் திட்டங்களில் மிக முக்கிய பங்காற்றியிருந்தனர். இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் விடுதிகளை நிர்வகித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உந்தப்பட்டனர்.

கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட சிறிலங்கா பாதுகாப்பு வீரர்கள் திறம்படச் செயற்பட்டனர்.  சிறிலங்கா இராணுவத்தினரின் பொறியியல் பிரிவானது மிகவும் வினைத்திறனுடன் தமக்குத் தரப்பட்ட கால அவகாசத்திற்குள் பாரிய கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தது. சிறிலங்காவில் செயற்படும் கட்டுமான நிறுவனங்கள் கூட வழமையாக இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சானது நகர அபிவிருத்தி அதிகார சபையைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததுடன் சிறிலங்காவின் பாரிய நகரங்களை மேலும் கவர்ச்சி மிக்க இடங்களாக மாற்றுவதிலும் திறம்படச் செயற்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆகவே இராணுவத்துறையை மறுமலர்ச்சி செய்வதானது இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்குச் சமனானது எனக் கருதும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள், கடந்த காலத்தில் இவர்களது தலைவரான ராஜபக்ச பல்வேறு இராணுவச் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தார் என்பதை ஊகிக்காமல் இருப்பது முட்டாள்தனமானதாகும்.

2018 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்காக 290 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மூலதனச் செலவீனமானது 30 பில்லியன் ரூபா மட்டுமேயாகும். ஆகவே மீதமுள்ள 260 பில்லியன் ரூபா செலவீனமானது குறைக்கமுடியாத செலவீனமாகும். ஆகவே பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தைக் குறைப்பதென்பது இலகுவான காரியமன்று.

இராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் அதன் மூலம் கிராமங்களில் வாழும் பல குடும்பங்களின் வருவாய் பாதிக்கப்படும். இதனால் இவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். ஏனெனில் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவானது இந்தக் குடும்பங்களின் பிரதான வருவாயாக உள்ளது.

1980 தொடக்கம் கடந்த மூன்று பத்தாண்டுகளாக ஆட்சிக்கு வந்த சிறிலங்கா அரசாங்கங்கள், கிராமங்களின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்த்த விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகள் வீழ்ச்சியடைவதற்கு வழிகோலின. இவ்விரு பொருளாதாரத் துறைகளுக்கான சிறிலங்கா அரசாங்கங்களின் பங்களிப்பானது கணிசமானளவு வீழ்ச்சியடைந்தன. குறிப்பாக விவசாயத்தில் மிகக் குறைவான தொழில்வாய்ப்புக்கள் காணப்படுகின்றன (நான் திசை திருப்புகிறேன் என நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஆனால் இவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்)

ஆகவே கிராமங்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் இங்கு நிலவிய வறுமையிலிருந்து தப்பிக்க நினைத்த இளைஞர்கள் இராணுவத்தில் அதிகளவில் இணையத் தொடங்கினர். இதேபோன்று கிராமங்களில் உற்பத்தித் துறைகளில் பணியாற்றிய இளைஞர்களும் இராணுவத்தில் இணையத் தொடங்கினர்.

ஆகவே ராஜபக்சவின் பரப்புரை இயந்திரத்தின் ‘தவறான வழிகாட்டலின்’ மூலமே சிறிலங்கா இராணுவத்தில் பெருமளவான இளைஞர்கள் இணைந்து கொண்டனர் என்பதற்கு அப்பால், இராணுவத்தில் இணைந்து கொண்ட இளைஞர் யுவதிகள் நன்றாகச் சிந்தித்து அறிவார்ந்த தீர்மானத்தை எடுத்துக் கொண்டனர் எனக்கூறுவது மிகவும் பொருத்தமானதாகும்.

கடந்த பல ஆண்டுகளாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பேரழிவைச் சந்திக்கும்   கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்து இராணுவத்திலுள்ள இளைஞர் யுவதிகள் தமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதற்கான வழிகள் திறக்கப்படும் போது மட்டுமே நாட்டின் பாதுகாப்புச் செலவீனத்தைக் கணிசமான அளவில் குறைக்க முடியும்.

இவ்வாறானதொரு சங்கடமான நிலையை மகிந்த ராஜபக்ச அறிந்திருந்தார். ஆனால் இதற்கான தெரிவை அவர் கொண்டிருக்கவில்லை. இதனால் இராணுவத்தினரை நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் இவர் ஈடுபடுத்தினார்.

இதேபோன்றே தற்போதைய அரசாங்கமும் சிறிலங்கா இராணுவ வீரர்களை பல்வேறு துறைகளிலும் பணியாற்றுவதற்கான தெரிவுகளை ஆராய வேண்டும். இதன் மூலம் மட்டுமே இராணுவ வீரர்களுக்கான தொழில்களையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்த முடியும்.

ஆங்கிலத்தில்  – Rathindra Kuruwita
வழிமூலம்        – Ceylon today
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *