மேலும்

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப்பங்கீடு விபரம்

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் முன்முயற்சியுடன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பங்காளிக் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, வலி.வடக்குப் பிரதேச சபை ஆகிய சபைகளின் நிர்வாகத்துக்காக தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும்.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் ரெலோ வல்வெட்டித்துறை நகர சபை, ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு பிரதேச சபைகளுக்கு  வேட்பாளர்களை நிறுத்தும்.

நல்லூர் பிரதேச சபை, வேலணை, வலி.கிழக்கு, கரவெட்டி பிரதேச சபைகளுக்கு தமிழ் அரசுக் கட்சியும், ரெலோவும், தலா இரண்டு ஆண்டுகள் நிர்வாகத்தை நடத்தும் இந்த மூன்று சபைகளுக்கும், தமிழ் அரசுக் கட்சி, ரெலோ என்பன தலா 40 வீத வேட்பாளர்களையும், புளொட் 20 வீத வேட்பாளர்களையும் நிறுத்தும்.

யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் பதவியும், வேலணை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் பதவி மற்றும் அங்கு 40 வீத வேட்பாளர்களை நிறுத்தும் வாய்ப்பும் ரெலோவுக்கு வழங்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் புளொட் கோரிய மானிப்பாய், சங்கானை, சுன்னாகம் பிரதேச சபைகள் தொடர்பாக இன்னமும்  இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ் அரசுக் கட்சி பச்சிலைப்பள்ளி,  கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளுக்கு பெரும்பான்மை வேட்பாளர்களை நிறுத்தும், இங்கு பிரதித் தவிசாளர் பதவிகளை ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் பங்கீடு செய்து கொள்ளும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு, துணுக்காய் பிரதேச சபைகளை தமிழ் அரசுக் கட்சியும், மாந்தை கிழக்குப் பிரதேச சபையை ரெலோவும், கரைத்துறைப்பற்று பிரதேச சபையை ரெலோ மற்றும் புளொட் இணைந்தும், நிர்வகிக்கும் வகையிலும் வேட்பாளர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில், நானாட்டான் , மன்னார் பிரதேச சபைகளை தமிழ் அரசுக் கட்சியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை ரெலோவும், மன்னார் நகர சபையை ரெலோ மற்றும் தமிழ் அரசுக் கட்சி இணைந்தும் ஆட்சியமைக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில்,  வவுனியா நகர சபை, வவுனியா வடக்குப் பிரதேச சபைகளுக்கு தமிழ் அரசுக் கட்சியும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச சபை ஆகியவற்றில் ரெலோ மற்றும் புளொட் இணைந்தும் நிர்வகிக்கும் வகையிலும் ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

வவுனியா நகரசபையின் பிரதி தவிசாளர் பதவி புளொட்டுங்கு வழங்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், களுவாஞ்சிக்குடி,,போரதீவு பிரதேச சபைகளும், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் பதவியும் ரெலோவுக்கு வழங்கப்படும். செங்கலடி, ஆரையம்பதி பிரதேச சபைகளை புளொட்டும், ரெலோவும் பகிர்ந்து கொள்ளும்.

மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஏனைய சபைகள் தமிழ் அரசுக் கட்சியிடம் இருக்கும்.

திருகோணமலை மாவட்டத்தில், உள்ள மூன்று சபைகளுக்கும் தமிழ் அரசுக் கட்சியே போட்டியிடும்.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், காரைதீவு பிரதேச சபைகளும், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பன ரெலோவுக்கு வழங்கப்படும் கல்முனை மாநகரபையின் 8 உறுப்பினர் பதவிகளில் 5 ரெலோவுக்கும் 3 தமிழ் அரசுக் கட்சிக்கும்  வழங்கப்படும்.

நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் தமிழ் அரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *