மேலும்

மகிந்த இல்லாமலேயே சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் – மகிந்த சமரசிங்க

Mahinda Samarasingheமகிந்த ராஜபக்ச இல்லாமலேயே வரும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறும் உரிமை கூட கூட்டு எதிரணிக்குக் கிடையாது.

மகிந்த ராஜபக்ச இல்லாமலேயே நாங்கள் நிச்சயம் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

முன்னர் இருந்ததை விட இப்போது அதிகமானவர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தவிர்த்து வெறேந்தக் கட்சியையும் கூட்டு எதிரணி ஆதரிப்பது சட்டவிரோதமானது.

அவர்கள் வேறொரு கட்சியுடன் செல்வது அல்லது அதனுடன் இணைந்து செயற்படுவது, கட்சியின் யாப்புக்கு எதிரானது.

எனவே அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கதவுகள் இன்னமும் திறந்தே உள்ளன. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் அவர்கள் இணைந்து கொள்ள முடியும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த முடியும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு, கூட்டு எதிரணியினர் எவ்வாறு  சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்குமாறு கோர முடியும்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் கட்சியே சிறிலங்கா பொதுஜன முன்னணி.

நாங்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆவணங்கள் , ஒளிப்படங்களை ஆவணப்படுத்துகிறோம். எங்கெங்கு, எப்போது, கூட்டு எதிரணியினர் சிறிலங்கா பொதுஜன முன்னணியினருக்கு ஆதரவாக பரப்புரை செய்தனர் என்று ஆவணப்படுத்துவோம்.

அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க முயன்றால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக நாடாளுமன்றத்திலோ, மாகாணசபைகளிலோ அங்கம் வகிக்க முடியாது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *