மேலும்

தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு

TELOதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு பேச்சுக்களில் ஏற்பட்ட இழுபறி நிலையை அடுத்தே, ரெலோ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் ரெலோ, புளொட், தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேச்சுக்களில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் கட்சிகளுக்கிடையில் ஆசனங்களைப் பங்கீடு செய்வது தொடர்பாக பேசப்பட்டது.

இந்தப் பேச்சுக்களில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், ரெலோ பொதுச்செயலர் என்.சிறிகாந்தா அதிருப்தியுடன் – பந்து  இன்னமும் தமிழ் அரசுக் கட்சியின் கையிலேயே உள்ளது- என்று கூறியபடி வெளியேறினார்.

இதையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

நேற்றிரவு 11 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம், இன்று அதிகாலை 1 மணி வரை வரை நீடித்தது.

இதன் பின்னரே, வரும் உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசுக் கட்சி விடாப்பிடியான, விட்டுக் கொடுப்பற்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், இதனால், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ரெலோ பொதுச்செயலர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருந்த ஈபிஆர்எல்எவ்  ஏற்கனவே தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது.

ரெலோவும் தற்போது அந்த முடிவை எடுத்துள்ளது. ஆசனப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களில் புளொட்டும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு கருத்து “தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு”

  1. Saro says:

    மக்களால் நிராகரிக்கப் பட்ட கட்சிகள் அத்தனையும் சேர்ந்து போட்டி இட்டால், TNA அல்லது தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெரும். தமிழரின் எதிர்காலம் ஒற்றுமையின் அடிப்படையில் அமையும். ஒற்றுமை இன்றேல் அனைவர்க்கும் தாழ்வு.

Leave a Reply to Saro Cancel reply

Your email address will not be published. Required fields are marked *