மேலும்

வடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற வேண்டும்- ஹக்கீம்

rauff hakeemவடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற ​வேண்டும் என்றும் அது தொடர்பாகப் பேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இணைந்த வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மன்னாரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள,  அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

“வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் ஒரு வகை மெத்தனப் போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு தொடர்பாக, பொது வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத விபரீதம் ஏற்படுத்த ஜே.ஆர்.ஜெயவர்ததன அரசு முயன்றது.

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம்களுக்கான தனி அலகு என்ற ​கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான பேச்சுகள், முன்னெடுப்புகள் மற்றும் விட்டுக்கொடுப்புகள் இடம் பெற ​வேண்டும்.

வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. சிக்கலை ஏற்படுத்த முனையும் தரப்பினருக்கு இது மேலும் தூபமிடுவதாகவே அமையும்.

தமிழ், முஸ்லிம் மக்களிடையில் எந்தவிதமான நல்லுறவும் பேணப்படக்கூடாது என்ற போக்கையே இத்த கையோர் கொண்டுள்ளனர். இது பிழையான அணுகுமுறையாகும்.

வடக்கு, கிழக்கு இணைப்பு அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தினூடாகவே அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரு மாகாணங்களும் அங்கீகாரம் வழங்கினாலும் அது சாத்தியமாகாது.

இவ்வாறான சில காப்பீடுகளும் இருக்கும் நிலையிலே இந்த விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போல காட்டி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவசரப்பட்டு பேசுவது அரசியல் பிழைப்புவாத பேச்சுக்கள் மட்டுமே. நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்து விடுவதைப் போன்று பேசுகின்றனர்.

முஸ்லிம்களின் உடன்பாடின்றி இதனை செய்ய முடியாது. செய்யவும் மாட்டோம் என சம்பந்தன் கூறியிருக்கிறார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்வுக்கு வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அடுத்து இதனை பற்றி ஆராயலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *