மேலும்

போர்க்கப்பல் கொள்வனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கடற்படைத் தளபதியை ஓய்வுபெற வைக்க அழுத்தம்?

Vice Admiral Travis Sinniahரஷ்யாவிடம் இருந்து 24 பில்லியன் ரூபாவுக்குப் போர்க்கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த ஓகஸ்ட் 22ஆம் நாள் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட  வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கடந்த செப்ரெம்பர் 26ஆம் நாள் 55 வயதை எட்டிய நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஒரு மாத சேவை நீடிப்பு வழங்கியிருந்தார்.

இதற்கமைய, சிறிலங்கா அதிபரின் மேலதிக சேவை நீடிப்பு கிடைக்காவிடின் வரும் 26ஆம் நாளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாஓய்வுபெற நேரிடும்.

கடற்படைத் தளபதிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு மாத சேவை நீடிப்பை மாத்திரம் வழங்கியமை, பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் அட்மிரல் சின்னையாவுக்கு ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரம் வழங்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

24 பில்லியன் ரூபாவுக்குப் போர்க்கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் என்பதற்காக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்படுகிறாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன, “ இல்லை, அது பிரச்சினையில்லை.  எந்த கடற்படைத் தளபதியும் 55 வயதில் ஓய்வுபெற வேண்டும். சிறிலங்கா அதிபர் அவருக்கு ஒரு மாத சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.

அவருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டும், என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *