மேலும்

வடக்கு அரசியல் குழப்பத்தை தீர்க்குமாறு சம்பந்தனை வலியுறுத்திய வெளிநாடுகள்

sampanthanஅண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை, முடிவுக்குக் கொண்டு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, வெளிநாட்டு தூதுவர்கள் பலரும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு அரசியலில் குழப்பம் தீவிரமடைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்ட போதே, சில வெளிநாட்டுத் தூதுவர்கள், இரா.சம்பந்தனுடன், தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறு ஆலோசனை கூறியுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இருந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும், வெளிநாட்டுத் தூதுவர்கள் வலியுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதில், அமெரிக்கா, சில மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா என்பன கவனம் செலுத்தியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் பாதிக்கப்படும் என்றும் இதனை முடிவுக்குக் கொண்டு வருமாறும் சில வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னிடம் கூறியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பு தமிழ் வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *