மேலும்

சிறிலங்காவில் வரட்சியால் 9 இலட்சம் பேரின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ஐ.நா அறிக்கை

சிறிலங்காவில் வரட்சி மற்றும் வெள்ளத்தினால் உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 இலட்சம் மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக, ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனம், மற்றும் ஐ.நா உணவுத் திட்டம் ஆகியன இணைந்து இது தொடர்பான அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளன.

அதில், கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து, பெருமளவு விவசாய விளைச்சல் பகுதிகள் கடுமையான வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் 9 இலட்சம் மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

2016 மற்றும் 2017 முற்பகுதியில் வரட்சியினால் பரவலாக ஆறுவடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டின் பிரதான உணவான அரிசி உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி 2.7 மில்லியன் தொன்களாக கணிக்கப்பட்டது.ஏற்கனவே கடந்த ஆண்டில் 40 வீதம் குறைவான அரிசி விளைச்சலே கிடைத்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கிடைத்த அறுவடையில் 35 வீதம் குறைவானதாகும்.

ஏனைய உணவுப் பொருட்களான பருப்பு வகைகள், மிளகாய், வெங்காயம் என்பனவற்றின் உற்பத்தியும் வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்கடும் மழையினால்  பெரும் வௌ்ளம் ஏற்பட்ட போதும், நாட்டின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் நீர்நிலைகளுக்கு அது நீரைத் தரவில்லை.

தற்போது கிட்டத்தட்ட 225,000 குடும்பங்களைச் சேர்ந்த, சுமார் 9 இலட்சம் பேர், உணவுப் பாதுகாப்பு இல்லாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது அறுவடைகள் பாதிக்கப்பட்டதாலும், வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்மையாலும், இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

வரட்சியை எதிர்கொண்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினரின், வழக்கமான வருமானம் பாதியாக குறைந்துள்ளது.

அடுத்த அறுவடைக்காலத்திலும் இதே நிலை நீடித்தால், நிலைமைகள் மேலும் மோசமடையும்.” என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *