மேலும்

ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2

Major General N.A Jagath C Dias‘மாலியில் பணியாற்றுவதற்காக எமது வீரர்கள் அழைக்கப்பட்டமையானது அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது’ என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்சா டீ சில்வா தெரிவித்தார்.

‘மாலியில் பணியாற்றுவதென்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதனால் இங்கு பணியாற்றுவதற்காக தமது வீரர்களைத் தந்துள்ள ஒரேயொரு நாடு சிறிலங்காவாகும்’ என ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் தெரிவித்தார்.

சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்ட மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக சிறப்பான பதிவுகளைக் கொண்ட நாடுகள்,  1993லிருந்து அதாவது சோமாலியாவில் 18 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர் தமது நாட்டு இராணுவ வீரர்களை ஐ.நா அமைதி காக்கும் படைக்கு அனுப்புவதற்கு தயக்கம் காண்பிக்கின்றனர்.

1994ல் இடம்பெற்ற ருவாண்டா படுகொலை தொடர்பாக கண்டுபிடிப்பதற்கு அமைதி காக்கும் படையினரை ஈடுபடுத்துவதற்கு இப்படுகொலையே பெரியதொரு தடையாகக் காணப்பட்டது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா வெளிப்படையாகப் பணியாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்தவர்களில் 2006-2009 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் தூதுவராகச் செயற்பட்ட றொபேட் ஓ பிளேக்கும் ஒருவராவார்.

‘அமைதி காக்கும் படை வீரர்கள் என்ற வகையில் நீங்கள் அங்கு அமைதியைக் கொண்டு வரவேண்டும். மாறாக இந்த வீரர்கள் பல்வேறு மீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கான பொருத்தமானவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது’ என கடந்த மாதம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் பிளேக் சுட்டிக்காட்டியிருந்தார்.

jegath dias (1)

‘சில இராணுவ வீரர்கள் ஒருபோதும் மீறல்களில் ஈடுபடவில்லை’ என மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கூறினார். ஆகவே இவரது இந்தக் கருத்தானது இவர் கூறிய சில இராணுவ வீரர்கள் மீறல்களில் ஈடுபட்டனர் என்பதையே குறிக்கின்றது.

‘எங்களால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகக் கதைக்க முடியாது. அவை தொடர்பாக ஏதாவது உண்மைகள் இருந்தால் நீங்கள் அவற்றைக் கதைக்கலாம்’ என ஏபி ஊடகத்திற்கான நேர்காணலில்  மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தெரிவித்தார்.

‘இராணுவ வீரன் ஒருவன் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினால் அவர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அதற்கான சாட்சியம் எங்கே? குற்றச்சாட்டுக்கள் என்பது குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன. இவற்றுக்கான ஆதாரங்கள் இல்லை’ என டயஸ் தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத்தின் ஒரு பிரிவை ஜெகத் டயஸ் தலைமை தாங்கி வழிநடத்தியிருந்தார். இறுதிக் கட்ட யுத்த காலத்தில் இவரது படையினர் பொதுமக்கள் மீதும் தேவாலயங்கள், வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான இடங்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டனர். ஆனால் இவர் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார்.

தன்னால் தலைமை தாங்கப்பட்ட 57வது டிவிசன் புலிகள் அமைப்பை இலக்கு வைத்து மட்டுமே தாக்குதலை மேற்கொண்டதாக டயஸ் தனது நேர்காணலில் தெரிவித்தார்.

டயஸிற்கு எதிராக ஐரோப்பாவில் பணியாற்றும் இரண்டு மனித உரிமை அமைப்புக்கள் 2011ல் சாட்சியங்களை வழங்கியதுடன் இவருக்கு எதிராக குற்றவியல் விசாரணையை நடத்தவுள்ளதாகவும் அச்சுறுத்தல் விடுத்த போது டயஸ் ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, வத்திக்கான் போன்ற நாடுகளுக்கான உதவித் தூதுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவுடன் சிறிலங்கா அரசாங்கத்தால் இவர் உடனடியாக நாட்டிற்குத் திருப்பி அழைக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளின் பின்னர்,  அதாவது 2013ல் சிறிலங்கா அமைதி காக்கும் படை வீரர் ஒருவர் மீதான பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு டயஸ் அனுப்பப்பட்டார்.

‘போர்க் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஒருவர் அமைதிப் படை வீரர் ஒருவரால் இழைக்கப்பட்ட குற்றத்தை விசாரணை செய்வதற்குத் தகுதியுடையவரல்ல’ என பேர்லினைத் தளமாகக் கொண்டியங்கும் சட்ட மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையத்தைச் சேர்ந்த அன்ட்ரீஸ் ஸ்குலர் தெரிவித்தார்.

2015ல் ஜெகத் டயஸ் இராணுவத் தலைமை அதிகாரியாகப் பதவி உயர்த்தப்பட்டார். இந்தப் பதவியானது சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது மிகப் பெரிய பதவிநிலையாகும். இவர் சில மாதங்களின் பின்னர் ஓய்வுபெற்றதுடன் தனியார் பாதுகாப்பு வர்த்தகம் ஒன்றில் ஈடுபட்டு வருகிறார்.

jegath dias (2)

2007ல் இடம்பெற்ற ஹெய்டி சிறுவர் பாலியல் சம்பவம் தொடர்பான விசாரணையில் டயஸ் ஈடுபடவில்லை. ஹெய்டியில் சிறிலங்கா இராணுவ வீரர்களால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சிறார்களில் ஒன்பது பேரை ஐ.நா மற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் விசாரணை செய்ததுடன் 134 சிறிலங்கா இராணுவ வீரர்களின் ஒளிப்படங்களையும் இந்தச் சிறுவர்களுக்குக் காண்பித்து அடையாளம் காண்பிக்குமாறு கேட்கப்பட்டனர்.

ஆனால் இந்த விசாரணையில் ஜெகத் டயஸ் பங்குபற்றவில்லை. ஆனால் இந்த விசாரணை தொடர்பாக ஐ.நா மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் இறுதி முடிவுகள் தொடர்பாக டயஸ் சந்தேகத்தைக் கொண்டுள்ளார். புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட வெளித்தரப்பினர் சிறிலங்காவிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம் என்பது டயஸின் கருத்தாகும்.

‘எமது இராணுவ வீரர்கள் மீதான எந்தவொரு பாலியல் மீறல் குற்றச்சாட்டும் பொய்யானது. எமது வீரர்கள் எவரும் இவ்வாறான மீறல்களில் ஈடுபடவில்லை. அதற்கான சாட்சியங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை’ என ஜெகத் டயஸ் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து 114 வீரர்களை சிறிலங்கா உடனடியாகத் தனது நாட்டிற்கு வரவழைத்தது. ஆனால் இது ஒரு நல்ல முடிவு என நான் நினைக்கவில்லை என டயஸ் தெரிவித்தார். ஹெய்டியில் சிறுவர் பாலியலில் ஈடுபட்ட இராணுவ வீரர்களில் 18 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பின்னர் சிறிலங்காவால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த விடயத்தை ஐ.நாவும் முடிவிற்குக் கொண்டு வந்தது.

ஹெய்டியில் ஐ.நா அமைதி காக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் மீறல்கள் நிதி சார் நெருக்கடியை ஏற்படுத்தக் காரணமாகியது. அதாவது அமைதி காக்கும் படையினருக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் நிதி நிறுத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்தப் பணிக்காக செலவிடப்படும் நிதியில் 30 சதவீதம்  அமெரிக்காவால் வழங்கப்படுகிறது.

ஹெய்டியில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் தொடர்பாக AP ஊடகம் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டதன் பின்னர், ‘தமது நாட்டு வீரர்களால் தவறிழைக்கப்படும் போது அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறும் நாடுகளுக்கான நிதி இழப்பீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்பதுடன் வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என ஐ.நா பாதுகாப்புச் சபை எச்சரித்துள்ளது’ என அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்தார்.

தற்போது 110,000 இற்கும் மேற்பட்ட படை வீரர்களைக் கொண்டுள்ள ஐ.நா அமைதி காக்கும் படை தொடர்பாக நீதி நடவடிக்கைகளை எடுப்பதில் ஐ.நா கரிசனை காண்பிக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐ.நா அமைதி காக்கும் படையில் உள்ள வீரர்கள் தவறிழைக்கும் போது அவர்களுக்கு எதிராக அவர்களின் சொந்த நாட்டு இராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஐ.நா குற்றம் சுமத்துவதுடன் ஐ.நா இது தொடர்பாகப் பொறுப்புக்கூறவில்லை என குறித்த நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்துவதால் நீதி நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்கப்படுவதில்லை என கென்ற் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் அனைத்துலக அமைதி காக்கும் ஊடகத்தின் பிரதம ஆசிரியருமான பிலிப் குன்லிப் தெரிவித்தார்.

haiti victims

புரூண்டிய காவற்துறையினரால் அவர்களது சொந்த நாட்டில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாக அவர்களை மத்திய ஆபிரிக்க குடியரசில் பணியாற்றுவதற்கு அனுமதிக்கமாட்டேன் என ஐ.நா கடந்த ஆண்டு அறிவித்தது.  தற்போது முதற்தடவையாக சிறிலங்கா இராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து ஐ.நா தனது அமைதி காக்கும் பணியில் இணைத்து வருகிறது.

இவ்வாறான சம்பவம் மிகச் சிறியளவில் புரூண்டி மற்றும் கொங்கோவில் இடம்பெற்றது. ஆனால் பெரியளவில் இடம்பெறுவது சிறிலங்காவிலேயே முதற்தடவையாகும். மாலிக்கான அமைதி காக்கும் படையில் அங்கம் வகிப்பதற்கு சிறிலங்கா வீரர்களில் 1000 பேர் உட்சேர்க்கப்பட்ட போதும் பின்னர்   200 வீரர்கள் மட்டுமே உட்சேர்க்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் ஜெயந்த குணரட்ன தெரிவித்தார்.

அவசியமான இராணுவ உபகரணங்களின் பற்றாக்குறையே இராணுவ வீரர்கள் குறைக்கப்பட்டமைக்கான காரணமாகும் என சிறிலங்கா இராணுவத்தினர் கூறுகின்றனர். ஆனால் சிறிலங்கா இராணுவ வீரர்களின் பெரும்பாலானவர்கள் ஒழுக்காற்று விடயத்தில் திருப்தியான பதிவுகளைக் கொண்டிராமையே மாலிக்கான ஐ.நா அமைதி காக்கும் படையில் இவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கான காரணம் என ஐ.நா அமைதி காக்கும் படையின் ஒழுக்காற்றுப் பிரிவின் தலைவர் அதுல் காரே தெரிவித்தார்.

‘எமது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் தோல்வியடைந்தவர்கள் தொடர்பாக கருத்துரைக்க நான் விரும்பவில்லை. ஆனால் ஒழுக்காற்று விடயத்தில் நாங்கள் பலமானதொரு கோட்பாட்டைக் கொண்டுள்ளோம்’ என காரே தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத்தினர் மீது ஹெய்டியில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னர் தற்போது சிறிலங்கா இராணுவத்தினருக்கு பாலியல் மீறல்களில் ஈடுபட்டால் எத்தகைய ஆபத்து ஏற்படும் என்பது தொடர்பாக தற்போது பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும், ஹெய்டியில் இடம்பெற்ற மீறல் குற்றச்சாட்டானது ஐ.நா அமைதி காக்கும் படையில் சிறிலங்கா வீரர்களின் சேவைக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு கரும்புள்ளியாகக் காணப்படுவதாக லெப். கேணல் திரால் டீ சில்வா தெரிவித்தார். இவர் சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாம் ஒன்றில் பொறுப்பதிகாரியாகச் செயற்படுகிறார். ‘தனிப்பட்ட சிலரின் தவறான நடத்தையே ஹெய்டிச் சம்பவத்திற்குக் காரணமாகும். ஆனாலும் அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது’ என லெப்.கேணல் திரால் டீ சில்வா தெரிவித்தார்.

‘சிறிலங்கா இராணுவ வீரர்களால் பாலியல் வன்புணர்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போது அதில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் வழங்குவதில் பின்னடித்தல் மற்றும் இவற்றுக்கான சாட்சியங்களைச் சேகரிக்க முடியாமை போன்றன குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக குற்றத்தை நிரூபிக்க முடியாமைக்கான காரணமாகும்’ என மூன்று இராணுவ வீரர்கள் கூட்டாகப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வழக்கொன்றை அண்மையில் விவாதித்த தமிழ் சட்டவாளரான கே.எஸ்.இரட்ணவேல் தெரிவித்தார்.

‘இவ்வாறான ஒழுக்கக்கேடான, பயங்கரமான, கொடுமைகளை இழைக்கும் வீரர்களைத் தொடர்ந்தும் அமைதி காக்கும் படையில் ஐ.நா வைத்திருப்பதானது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது’ என இரட்ணவேல் தெரிவித்தார்.

ஹெய்டியில் முகாமிட்டிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி ஒருவர் மூலம் தாயாகிய சிறுமி ஒருவருக்கு ஐ.நா அமைதி காக்கும் படையின் திணைக்களத்தின் அழுத்தத்தின் மூலம் சிறிலங்காவால் 45,243 டொலர் இழப்பீடாக வழங்கப்படும் என கடந்த  ஆண்டு சிறிலங்கா உடன்பட்டதை ஐ.நா அண்மையில் பாராட்டியது. இது சிறிலங்காவின் ‘சிறப்பான நடைமுறைகளைக்’ காண்பிப்பதாக ஐ.நா பாராட்டியுள்ளது.

கடந்த கோடையில் இக்கொடுப்பனவிற்கான கட்டளையில் கையெழுத்திட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி  ஏபி யிடம் தெரிவித்தார்.

‘பொதுவாக எமது அமைதி காக்கும் படை வீரர்கள் தொடர்பாக மோசமான பதிவுகளை நாம் கொண்டிருக்கவில்லை’ என ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

ஆங்கிலத்தில்   – Katy Daigle and Paisley Dodds
வழிமூலம்        – Associated Press
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *