மேலும்

தமிழர் தாயகத்தில் அன்னை பூபதி நினைவு கூரல் நிகழ்வுகள்

annai-poobathy (1)விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடத்தி வந்த போரை நிறுத்தி,  நிபந்தனையின்றிப் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றன.

இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில், 1988ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் நாள் மட்டக்களப்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி, 1988 ஏப்ரல் 19ஆம் நாள் உயிர்துறந்தார்.

இவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில் நேற்று மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பில், நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கல்லடியில் நேற்றுக்காலை அன்னை பூபதியின் நினைவிடத்தில் நடந்த நிகழ்வில், மட்டக்களப்பு சிவில் சமூகப்பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

annai-poobathy (1)annai-poobathy (2)annai-poobathy (3)annai-poobathy (4)annai-poobathy (5)annai-poobathy (6)annai-poobathy (7)

மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டிலும், அன்னை பூபதி நினைவு கூரல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

திருகோணமலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்ட அரங்கில் நேற்று அன்னை பூபதியை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலகத்திலும், யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலகத்திலும் நேற்று அன்னை பூபதி நினைவு கூரல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் தாயகப் பகுதிகளில், அன்னை பூபதி நினைவு நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் இம்முறையே அன்னை பூபதி நினைவு நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *