மேலும்

சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான்

japan flagமூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது.

சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்களின் முன்னிலையில், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவரும், ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவரும் இதுதொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

ஜப்பான் வழங்கவுள்ள 6300 கோடி ரூபா நிதியில் இரண்டு கடன் உதவித் திட்டங்களாகும். ஒன்று கொடைத் திட்டமாகும்.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக ஜப்பான் 12.957 பில்லியன் யென்னை கடனாக வழங்கவுள்ளது. களுகங்கை நீர் விநியோக விரிவாக்கத் திட்டத்துக்கு 31.81 பில்லியன் யென் கடன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

மேலும் பொருளாதார சமூக அபிவிருத்தித் திட்டத்துக்கு 1 பில்லியன் யென் கொடையாக வழங்கப்படவுள்ளது.

இதில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக வழங்கப்படும் நிதி உதவி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊடா மாகாணங்களில், உள்ளூர் வீதிகள், சிறிய, நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள், சிறியளவிலான நீர் விநியோகத் திட்டங்கள்,மேற்படி மாகாணங்களின் வாழ்வாதார மற்றும் உற்பத்தியுடன் நேரடித் தொடர்புடைய திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும்.

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக வழங்கப்படும் 1பில்லியன் யென் நிதி, திருகோணமலைத் துறைமுகத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.

ஜப்பான் வழங்கியுள்ள கடன்கள் இரண்டுக்கும் ஆண்டுக்கு 1.4 வீதப்படி வட்டியை செலுத்த வேண்டும் என்பதுடன், 25 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *