மேலும்

சிறிலங்கா துறைமுகங்களை பயன்படுத்த வெளிநாட்டுப் படைகளுக்கு அனுமதி இல்லை – ரணில் உறுதி

ranilஏனைய நாடுகளின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும் பயன்படுத்த வெளிநாட்டுப் படைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர், ரோக்கியோவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

“பூகோள நிலைமைகளையும், ஜப்பானின் முக்கியத்துவத்தையும் சிறிலங்கா விளங்கிக் கொண்டுள்ளது. பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டைப் பாதுகாக்க சிறிலங்கா அர்ப்பணிப்புடன் உள்ளது.

சிறிலங்காவின் அனைத்து துறைமுகங்களினதும் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையின் வசமே இருக்கும்.

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ துறைமுகமாக இருக்காது. சிறிலங்கா கடற்படையும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளுமே இதன் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும்.

அம்பாந்தோட்டை துறைமுகம் மீதான சீனாவின் ஆர்வம், குறித்து , குறிப்பாக, இராணுவ நலன்கள் தொடர்பாக சந்தேகங்கள் நிலவுகின்றன.

சீன நிறுவனத்துக்கும் சிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு முயற்சி உடன்பாடு, எந்தவொரு வெளிநாடும் துறைமுகத்தை இராணுவத் தேவைக்காக பயன்படுத்துவதை  தடுக்கும் வகையிலானதாக இருக்கும்.

இது ஒரு வர்த்தக நடவடிக்கை. சிறிலங்கா கடற்படை தவிர்ந்த வேறெவரும், சிறிலங்காவின் துறைமுகங்களை இராணுவத் தேவைக்காகப் பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.

துறைமுகத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை, காவல்துறை, சுங்க மற்றும் குடிவரவுத் திணைக்களம் என்பனவே கையாளும். எல்லா உள்ளக பாதுகாப்பு அதிகாரிகளும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களாகவே  இருக்க வேண்டும்.

இந்த உடன்பாட்டு விதிகள் மீறப்பட்டால், சிறிலங்கா அரசாங்கம் எந்த இழப்பீட்டையும் செலுத்தாமல் துறைமுகத்தை மீளப்பெற முடியும்.

எந்தவொரு போர்க்கப்பலும் துறைமுகத்துக்கு வர முடியும். சிறிலங்கா அரசாங்காம் அதற்கு அனுமதி அளிக்கும். அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *