மேலும்

பொதுவாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் – வழிகாட்டல் குழுவில் இணக்கம்

parliamentஅரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமா -இல்லையா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வழிகாட்டல் குழுவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு தகவல் வெளியிடுகையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பொருள் மற்றும் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

அது ஒரு புதிய அரசியலமைப்பா அல்லது  அரசியலமைப்பு திருத்தமா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அண்மையில் வழிகாட்டல் குழு உறுப்பினர்களைச் சந்தித்த சிறிலங்கா அதிபரும், பிரதமரும், பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இது உகந்த சூழல் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிசாட் பதியுதீன், மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

“இந்தக் கூட்டத்தில் எமது மனதில் உள்ள விடயங்களைப் பேசுவதற்கு அனைவரும் அனுமதிக்கப்பட்டோம். புதிய அரசியலமைப்பு பொதுவாக்கெடுப்புடன் கொண்டு வரப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் கடுமையாக வலியுறுத்தினார்.

சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அதற்கு இது பொருத்தமான நேரம் இல்லை என்று தெரிவித்தனர்.

வரைவை நிறைவு செய்து அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் கவனம் செலுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்” என்றும் வழிகாட்டல் குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *