மேலும்

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா

India-srilanka-Flagஇந்தியாவுடன் பொருளாதாரத் திட்டங்கள் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா இந்த ஆண்டில் கையெழுத்திடவுள்ளது.

திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுடன் இணை்ந்து அபிவிருத்தி செய்வது, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பது மற்றும் ஏனைய கைத்தொழில்களை உருவாக்குவது என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது.

இந்தியாவுடனான இந்த புரிந்துணர்வு உடன்பாட்டை காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சிடம் வழங்கப்படவுள்ளது.

எனினும் இந்தியத் தரப்பில் இதனை யார் நடைமுறைப்படுத்துவது என்று இன்னமும் இனங்காணப்படவில்லை.

சிறிலங்கா பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவில் இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  • கெரவலப்பிட்டியவில் திரவ இயற்கை எரிவாயு மூலம் 500 மெகாவாட்ஸ் உற்பத்தித் திறன் கொண்ட மின் நிலையத்தையும், திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து செமிப்பதற்கான முனையம் மற்றும் மிதக்கும் களஞ்சிய வசதியையும் ஏற்படுத்தல்.
  • இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகப்படுத்தும் வகையில்  கொழும்பில் குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்வதற்கு சிறிலங்காவுக்கு இந்தியா உதவுதல்.
  • சம்பூரில் 50 மெகாவாட்ஸ் திறன் கொண்ட (100 மெகாவாட்ஸ் வரை விரிவாக்கக் கூடிய) சூரிய சக்தி மின் திட்டம் ஒன்றை அமைத்தல்.
  • திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதியில் உள்ள மேல் நிலை எண்ணெய் குதங்களை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்தல்.
  • திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஏனைய கைத்தொழில்களை நிறுவுதல்.
  • சிறிலங்காவில் கைத்தொழில் வலயங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார வலயங்களை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுதல்.
  • இந்திய- சிறிலங்கா கூட்டு முயற்சியாக தம்புள்ளை – திருகோணமலை வீதியை அதிவேக நெடுஞ்சாலையாக அபிவிருத்தி செய்தல்.
  • மன்னார்- யாழ்ப்பாணம், மன்னார்- திருகோணமலை நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்தல்.
  • சிறிலங்காவில் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்தல்.
  • கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் இந்திய நிறுவனங்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்.

போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *