மேலும்

சீனாவுடனான நட்பினால் இந்தியாவை இழக்கமாட்டோம் – சிறிலங்கா பிரதமர்

ranilசீனாவுடனான சிறிலங்காவின் நட்பு, இந்தியாவை இழக்கச் செய்து விடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா எப்போதுமே சீனாவுடன் நட்பாகத் தான் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை இழந்து விடவில்லை.

நாங்கள் பல நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ளோம். ஆனால் ஏனையவர்களை இழந்து விடவில்லை. இந்தியாவுடனான உறவுகள், சீனாவுடனான உறவுகளை விட வேறுபட்டவை.

இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக  நகர்கின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் அசாதாரண சூழல் உள்ளது என்பது இந்திய ஊடகங்களின் பார்வையாகவே இருக்கும்.

நாங்கள் பாதுகாப்புத் துறையில் நல்லுறவுகளை வைத்துள்ளோம். பொருளாதார உறவுகளை வைத்திருக்கிறோம். பல திட்டங்களை எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதுபோலவே பாதுகாப்புத் துறையிலும் மிகப் பலமான ஒத்துழைப்புக் காணப்படுகிறது. தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். இந்தியா அமைச்சர்களுக்கும் சிறிலங்கா அமைச்சர்களுக்கும் இடையிலும், இந்தியா- சிறிலங்கா அதிகாரிகளுக்கு இடையிலும், பெருமளவு அதிகாரபூர்வமற்ற தொடர்புகள் பேணப்படுகின்றன.

இந்தியா- சிறிலங்கா இடையிலான உறவுகளில் மிகச் சிறந்த காலப்பகுதி இதுவாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

அம்பாந்தோட்டையில் எந்தவொரு கைத்தொழில் வலய முதலீட்டாளருக்கும் காணிகளைக் குத்தகைக்கு வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த வாரத்தில் கூட சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் பேச்சு நடத்தியிருந்தனர்.

காலி அருகே நிலப்பகுதி இருப்பதால், ஆந்திரப் பிரதேச கைத்தொழில் உட்கட்டமைப்பு கழகத்துடன் இணைந்து செயற்பட சிறிலங்கா விரும்புகிறது.

எந்தவொரு நாடாக இருந்தாலும் சிறிலங்கா வரவேற்கிறது. சிறிலங்கா அரசாங்கத்திடம் உள்ள கைத்தொழில் நிலங்களை குத்தகைக்குப் பெற்று அங்கு தமது முதலீடுகளைச் செய்து கைத்தொழில் வலயங்களை உருவாக்கலாம்.

நாட்டுக்குள் முதலீட்டாளர்களை வரவழைப்பதற்காக இதனை நாம் விரும்புகிறோம். இந்தியாவும் கூட சிறிலங்காவில் கைத்தொழில் வலயத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடி வருகிறது.

ஜப்பானுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவினால் எப்படி அபிவிருத்தி செய்ய முடியும் என்று ஆராய்ந்து வருகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *