மேலும்

சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – யஸ்மின் சூகா செவ்வி

Yasmin Sookaதென்னாபிரிக்காவில் உள்ள மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று இயக்குனருமான யஸ்மின் சூக்கா. இவர் ஒரு முன்னணி மனித உரிமைச் சட்டவாளரும் செயற்பாட்டாளரும் கலப்பு நீதிப்பொறிமுறை, பால், அனைத்துலக போர்க் குற்றங்கள் போன்ற பல்வேறு துறைகள் சார் அனைத்துலக வல்லுனராகவும் விளங்குகிறார்.

இவர் சிறிலங்கா தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். யஸ்மின் சூக்காவுடனான நேர்காணலின் விபரம் வருமாறு:

கேள்வி: அனைத்துலக உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் பணி தொடர்பாக விளக்க முடியுமா?

பதில்: மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக அறிக்கைப்படுத்துவதுடன், இவ்வாறான மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள், உண்மையைக் கண்டறியும் நடடிக்கை போன்றவற்றுக்குத் தேவையான பல்வேறு சாட்சியங்களையும் சேகரிப்பதும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணியாக உள்ளது. அத்துடன் பொது அமைப்புக்களுக்கு பயிற்சி வழங்குதல் உட்பட கலப்பு நீதிப் பொறிமுறையை முன்னெடுக்கும் விதமான பணிகளையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது.

போர், சித்திரவதை, பலவந்தமான தடுப்பு, கடத்தல்கள், பாலியல் வன்முறைகள் போன்றவற்றிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களிடம் அவர்களுக்கு நேர்ந்த மீறல் சம்பவங்கள் தொடர்பாக சாட்சியங்களைச் சேகரிப்பதுடன் அவற்றை விரிவாக அறிக்கையிடுவதும் இந்த அமைப்பின் மிக முக்கிய பணியாகும். எமது அறிக்கைகள் மருத்துவ மற்றும் சட்ட அறிக்கைகள் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

இந்த வகையில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டம் சாட்சியங்களைச் சேகரித்துள்ளது. இதன் மூலம் சிறிலங்காவில் அநீதி இழைத்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான சுயாதீன நீதிப் பொறிமுறையைக் கொண்ட நம்பகமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பிரிவொன்று உருவாக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம். இதன்மூலம் சிறிலங்காவில் வாழும்  மக்கள் உண்மையைக் கண்டறிய முடியும்.

கேள்வி: சிறிலங்காவின் அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஜனவரி 2015 தொடக்கம் சிறிலங்காவில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது?

பதில்: அனைத்துலக ரீதியில் நோக்கில், சிறிலங்காவில் நிலைமை மாறியுள்ளது. அதாவது ராஜபக்சக்களின் அதிகாரத்துவ ஆட்சியிலிருந்து சிறிலங்கா விடுபட்டுள்ளது. இதனால் சிறிலங்கா பொறுமையுடனும் விருப்புடனும் செயற்பட்டு வருகிறது. சிறிலங்காவில் செயற்படும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான சூழ்நிலை தற்போது காணப்படுகிறது.

தென்னிலங்கையில் பொது மக்களுக்கான உரிமைகள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் தலையீடுகள் அதிகரித்த வாழ்க்கையையே இன்றும் வாழ்கின்றனர். சிறிலங்காவில் தற்போதும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்ற பல்வேறு மீறல்கள் தொடர்கின்றன.

இது தொடர்பாக அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டம் சிறிலங்காவிலிருந்து புகலிடம் கோரி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களைச் சேகரித்து வருகிறது. போர் முடிவுற்று எட்டு ஆண்டுகள் கடந்த போதிலும் சிறிலங்காவில் இன்னமும் இராணுவ ஆட்சி இடம்பெறுவதானது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். பாதுகாப்புப் படைகள் தொடர்ந்தும் குற்றம் இழைக்கின்றனர்.

கேள்வி: கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய நகர்வை முன்னெடுக்க வேண்டும்?

பதில்: நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் என்கின்ற அதீத நம்பிக்கையுடனேயே சிறிசேன அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர். குறிப்பாக தமிழ் மக்கள் இதில் அதிகம் பங்களித்தனர். ஆனால் தமிழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து சிறிசேன அரசாங்கத்தைத் தெரிவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த மக்கள் ஏமாற்றத்துடனேயே வாழ்கின்றனர். சிறிசேன ஆட்சியிலும் பல்வேறு குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என இங்கு உறுதிப்படுத்த முடியும். ஏனெனில் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையகத்தின் அறிக்கையில் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த காலத்திலிருந்து வேறுபட்ட நீதிப் பொறிமுறை ஒன்று சிறிலங்காவிற்கு ஏன் தேவை என்பதற்கான தெளிவான ஒரு நோக்கத்தை வரையறுப்பதில் சிறிசேன அரசாங்கம் தவறியுள்ளது. போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான கலப்பு நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் போதே நாட்டில் நல்லிணக்கம் வெற்றி பெறும். அத்துடன் நாட்டில் தொடர்ந்தும் பல்வேறு மீறல்கள் நடைபெறுவதால், சிங்களவர்கள், முஸ்லீம்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு மாற்றம் ஒன்று அவசரமாகத் தேவைப்படுகிறது.

தேசிய அளவில் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நீதிச் செயற்பாடு நீண்டகாலமாக இழுபடுகிறது. ஆகவே இது தொடர்பில் கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும் போது இது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை. சிறிலங்காவில் காணாமற் போனோருக்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் இதில் எவ்வித முன்னேற்றமுமில்லை.

காணாமற் போனோர் அலுவலகத்திற்கான தலைமைப் பொறுப்பை சிங்களவர் ஒருவருக்கு வழங்கவே அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் காணாமற்போனோரில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதால் இந்தப் பொறுப்பைபத் தமிழ் அதிகாரிகளிடமே வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகத்தினர் தமக்கு நீதியைப் பெற்றுத் தருவார்கள் என நம்புகின்ற பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது இங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணாமற் போனோர் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட மதத்தலைவர்கள்  உட்பட சில மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டனர் என்பதும் இங்கு நினைவிற் கொள்ளப்பட வேண்டும்.

கேள்வி: சிறிலங்காவின் கலப்பு நீதிப் பொறிமுறையில் அனைத்துலக பங்குதாரர்களின் பங்களிப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும்?

பதில்: எந்தவொரு கலப்பு நீதிப் பொறிமுறையும் வெற்றியளிக்க வேண்டுமானால், உள்ளுரில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் வேறு அமைப்புக்களால் நிர்வகிக்கப்படாது பாதிக்கப்பட்ட சமூகத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும். எனினும், பல பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் வன்முறைகள், மீறல்கள் போன்றன தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் மீதான நம்பிக்கையை இழப்பதற்குக் காரணமாக உள்ளது.

இதனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சிறிலங்காவின் நீதிச் செயற்பாட்டில் காத்திரமான அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். நம்பகமான உள்நாட்டு பொறிமுறை என்பது சிறிலங்காவைப் பொறுத்தளவில் எப்போதும் தோல்வியையே சந்தித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் இதில்  அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும்.

கேள்வி:  நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்குச் சாதகமாகவே போர்க்கால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இதில் பொருளாதாரத் தீர்வு முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என வேறு சிலர் வாதிடுகின்றனர். அத்துடன் பொறுப்புக்கூறல் நடவடிக்கையானது அனைத்துலக பங்குதாரர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: சிறிலங்காவைப் பொறுத்தளவில் இனப் பிரச்சினைக்கு அரசியல் மற்றும் பொருளாதாரத் தீர்வு மிகவும் அவசியமானதாகும். எனினும், அத்துடன் பொறுப்புக்கூறல் மற்றம் தீவிர குற்றங்களுக்கு எதிராக தண்டனை வழங்குதல் போன்றனவும் சமஅளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. 2009ல் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நான் ஐ.நா வல்லுனர் குழுவில் அங்கம் வகித்த போது போரிலிருந்து தப்பிப் பிழைத்த மக்களை நான் சந்தித்தேன். அவர்களின் போர் வடுக்களை நான் செவிமடுத்தேன் என்ற வகையில் போர் வலயத்தில் இவர்கள் மிகவும் துணிச்சலுடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறிந்தேன். ஆகவே இந்த மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மிகவும் மோசமானவை. இந்த மீறல்களுக்கு எதிராக பொறுப்புக் கூறப்பட வேண்டும்.

சிறிலங்காவின் மிகச் சிறிய போர் வலயத்தில் ஒரு சில வாரத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட போது இதில் அனைத்துலக சமூகம் எவ்வித தலையீடும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் துன்பகரமான விடயமாகும். இந்தப் போர் வலயத்தில் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன. ஆனால் உலக நாடுகளால் இந்த வலயத்திற்குள் செல்ல முடியவில்லை. இலங்கையர்களுக்குக் கூட இங்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தென்னாபிரிக்கா, சியராலியோன் போன்ற பல்வேறு நாடுகளிலும் நான் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் ஊடாக நோக்கில், சிறிலங்காவைப் பொறுத்தளவில் அரசியல் மாற்றம் மட்டுமல்லாது பொருளாதார மாற்றமும் இடம்பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

ஆனால் கட்டளை வழங்கும் பொறுப்புக்களில் பணியாற்றிய அதிகாரிகள் தொடக்கம் குற்றமிழைத்த பலருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்படவில்லை. மத நம்பிக்கைகள், இனம், சமூகம் போன்ற பல்வேறு பிரிவினைகளுக்கு அப்பால் சிறிலங்கா அரசானது அனைத்து மக்களுக்காகவும் சமமாகப் பணியாற்ற வேண்டும் என்பதையே பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு சிறிலங்கா அரசு பணியாற்றும் போது மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதன் மீது நம்பிக்கை ஏற்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார மலர்ச்சி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு குடிமகனுக்கும் அபிவிருத்தி என்பது முக்கியமானதாகும். ஆனால் அதை விட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவது மிக முக்கியமானதாகும் என நாங்கள் நினைவுபடுத்தி வருகிறோம்.

கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரானது பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச் 24 வரை இடம்பெற்று வருவதுடன் இதில் சிறிலங்கா தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் என்ன நடக்க வேண்டும் என தாங்கள் விரும்புகிறீர்கள்?

பதில்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிட்ட விடயங்களை சிறிலங்கா இன்னமும் நிறைவேற்றவில்லை எனவும் இதில் சிறிலங்கா ஆர்வம் காண்பிக்கவில்லை எனவும் மனித உரிமைகள் உயர் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவாறு வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய கலப்பு நீதிப் பொறிமுறையை சிறிலங்கா இன்னமும் உருவாக்கவில்லை. சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப் பொறிமுறை வெற்றியளிக்காது என மனித உரிமைகள் பேரவை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இந்த விடயம் தொடர்பில் சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் இடவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

செவ்வி கண்டவர் – Taylor Dibbert
வழிமூலம்             – The wire
மொழியாக்கம்       – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *