மேலும்

சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்

Sellammaநான் இங்கு இரவில் நித்திரை கொள்ளும் போது எனது வீட்டில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்வேன்’ என புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வெளியே தங்கியுள்ள 83 வயதான சிங்கரத்தினம் செல்லம்மா கூறினார்.

தமது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்னால் 49 குடும்பங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2009 தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள 19 ஏக்கர் நிலங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரியே இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘எனக்கென சொந்த வீடொன்று இருக்கும் போது நான் ஏன் எனது உறவினரின் வீட்டில் தங்கியிருக்க வேண்டும்? எம்மிடம் எமது நிலங்களுக்கான ஆவணங்கள் உள்ளன. இந்த ஆவணங்களை அரசாங்கம் உறுதிப்படுத்தி எமது நிலங்களை எம்மிடம் கையளிக்காது இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன?’ என திருமதி செல்லம்மா வினவினார்.

தனது காணியை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடம் கையளித்த மனுக்களையும் திருமதி செல்லம்மா காண்பித்தார். இவர் யுத்தத்தின் போது தனது மகனையும் மருமகளையும் இழந்த பின்னரும் கூட, ஒரு நாள் தனது சொந்த வீட்டிற்குத் தான் திரும்பிச் செல்வேன் என்கின்ற நம்பிக்கையுடன் மட்டுமே அவர் உயிர் வாழ்கிறார்.

வடக்கு மற்றும் கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த 9020 ஏக்கர் நிலங்களை சிறிலங்கா அரசாங்கம் இதுவரை விடுவித்துள்ளது. ஆனாலும் பொதுமக்களின் நிலங்கள் பல இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது திருமதி செல்லம்மா தனது நிலத்தை விடுவிக்குமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்னுள்ள வீதிக்கு மறுபுறத்திலேயே இவரது காணி அமைந்துள்ளது. அந்த வீதிக்கு மறுபுறத்தே கதவுகள் மூடப்பட்டவாறு ஒரு சிறிய கடை காணப்படுகிறது. அந்தக் கடை தனது மகளுக்குச் சொந்தமானது எனவும் அதில் தனது மகள் பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் திருமதி செல்லம்மா கூறினார்.

அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் சிறிலங்கா இராணுவ வீரர்கள் இருவர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களை மீளப் பெற்றுக் கொள்வதில் நில ஆவணங்கள் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆனாலும் போர் நிறைவு பெற்று எட்டு ஆண்டுகள் கடந்த போதிலும் சிறிலங்கா இரணுவத்தினர் இன்றும் தமது நிலங்களைக் கையகப்படுத்தி வைத்திருப்பதற்கான காரணம் என்ன என்பதே இந்த மக்களின் வினாவாக உள்ளது. Sellamma at protest

‘எமது நிலங்களை விடுவித்து விட்டதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் எம்மை அங்கே வருமாறும் கூறினர். ஆனால் நாங்கள் அங்கு சென்ற போது சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தனர். இதன் காரணமாகவே நாங்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தோம்’ என கேப்பாப்பிலவிலுள்ள சூரியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்ணகுமார் கிரிசாந்தி தெரிவித்தார்.

இந்த மக்கள் தொடர்ந்தும் ஒரு மாத காலமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் அங்கே சிறிய கூடாரங்களை அமைத்து அதில் சமைத்து உண்கின்றனர். அத்துடன் அவர்களது பிள்ளைகள் அக்கூடாரத்திலேயே படிப்பு மற்றும் விளையாட்டிலும் ஈடுபடுகின்றனர்.

மார்ச் 04 இற்கிடையில் முல்லைத்தீவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அண்மையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

‘நாங்கள் இந்தச் செய்தியை அறிந்தபோதிலும் உண்மையில் எமது காணிகள் விடுவிக்கப்படும் வரை எமது ஆர்ப்பாட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளோம்’ என திருமதி செல்லம்மாவின் மகனான லிங்கேஸ்வரன் ஈசன் தெரிவித்தார்.

‘நாங்கள் இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க முடியாது. ஏனெனில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உயர் கண்காணிப்புக்களும் தலையீடுகளும் காணப்பட்டன’ என புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சீலன் தெரிவித்தார். இவர்களின் இந்த ஆர்ப்பாட்டமானது இராணுவத்தின் வசம் நிலங்களின் உரிமையாளர்களான ஏனைய மக்களுக்கும் ஒரு உந்துதலை வழங்கியுள்ளது.

‘நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களோ அல்லது முழு இராணுவத்திற்கும் எதிரானவர்களோ அல்லர். இராணுவத்தினர் எமது நிலங்களை விட்டு வெளியேற வேண்டும். இந்தச் செய்தியானது தெற்கைச் சென்றடைய வேண்டும். இதன்மூலம் அங்கிருக்கும் மக்களும் எமது போராட்டத்தை விளங்கிக் கொள்வார்கள்’ என சீலன் தெரிவித்தார்.

பெரும்பாலான மக்களைப் பொறுத்தளவில் அவர்களது சொந்த நிலங்கள் என்பது வெறுமனே அவர்களது வாழிடங்களாக மட்டுமில்லாது அவர்களது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்வதற்கான நிலமாகவும் காணப்படுகிறது. இந்த மக்கள் தமது நிலங்களில் வீடுகளை அமைப்பதுடன் இந்த நிலங்களில் இவர்கள் பயிர்ச்செய்கையிலும் ஈடுபடமுடியும்.

இந்த மக்கள் தமது நிலங்களில் தென்னை, மாமரங்கள், வெற்றிலை போன்ற பல்வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு அதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியிருந்தார்கள்.

‘அண்மையில் இடம்பெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் இயற்கை வளங்களான நிலம் மற்றும் நீர் போன்றவற்றுடன் தொடர்புபட்டுள்ளன. அதாவது மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் செல்ல வேண்டும். ஆகவே இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களிலேயே எமது வாழ்வாதாரம் தங்கியுள்ளது. எமது வாழ்வானது நிலம் மற்றும் கடலுடன் ஒன்றித்துக் காணப்படுகிறது’ என முல்லைத்தீவு மீனவர் சங்கத் தலைவர் ஏ.மரியராசா தெரிவித்தார்.

ஆங்கிலத்தில்   – Meera Srinivasan
வழிமூலம்         – The hindu
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *