மேலும்

சமந்தா பவரின் இடத்தைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே

அமெரிக்காவின் புதிய அதிபராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக தென் கரோலினா மாகாண ஆளுனர் நிக்கி ஹாலேயை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளிப் பெண்ணான நிக்கி ஹாலே, டொனால்ட் ட்ரம்ப், வரும் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஐ.நாவுக்கான தற்போதைய தூதுவர் சமந்தா பவரிடம் இருந்து அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார்.

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் பதவியானது, அமைச்சர் பதவிக்கு இணையானதாகும்.

தற்போது ஐ.நாவுக்கான தூதுவராக பதவி வகிக்கும் சமந்தா பவர், சிறிலங்கா விவகாரத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார் என்பதும், பொறுப்புக்கூறல் விவகாரங்களில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் சமந்தா பவர் கணிசமான பங்கை வகித்திருந்தார்.

அவருக்குப் பதிலாக இந்தப் பதவியை ஏற்கவுள்ள நிக்கி ஹாலே, சிறிலங்கா விவகாரத்தில் எத்தகைய ஆர்வத்தை வெளிப்படுத்துவார் என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.

கடந்த அதிபர் தேர்தலில் தமது கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக, நிக்கி ஹாலே பரப்புரைகளை மேற்கொண்டவர் என்ற போதிலும், அவருக்கு இந்தப் பதவியை வழங்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

நிக்கி ஹாலே வெளிவிவகாரம் தொடர்பான விடயங்களில் போதிய அனுபவமற்றவர் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *