மேலும்

வடக்கு, கிழக்கு நிலைமையை கட்டுப்படுத்த தவறினால் ஆபத்து – எச்சரிக்கிறார் கமால் குணரத்ன

Maj.Gen_.Kamal-Gunaratneவடக்கு, கிழக்கில் தற்போது தோன்றியுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறினால், பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, காலியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்காவின் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக,  திருப்தியடைய முடியாது.

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த, உரிய தரப்பினர் உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிடின், இது பாரிய பிரச்சினையைத் தோற்றுவித்து விடும்.

சிறிலங்கா இராணுவத்தினர்  கடுமையாகச்  செயற்பட்டிருந்தால்,  ஆவா குழுவின் செயற்பாடுகளை முடக்கியிருக்க முடியும்.

இராணுவ புலனாய்வுப் பிரிவு, கடந்த காலங்களில் மிகவும் பலம்வாய்ந்ததாக இருந்தது.  அதனால், ஆவா குழு  போன்ற குழுக்கள் இயங்க, அந்தக் காலப்பகுதியில் வாய்ப்பிருக்கவில்லை.

ஆனால், இப்போது பல்வேறு காரணங்களால்,  புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சுதந்திரமாக இயங்க முடியாதுள்ளனர்” என்றும் அவர், கூறியுள்ளார்.

இதற்கிடையே மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் இந்தக் கருத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.

“வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு தொடர்பான எந்தப் பிரச்சினைகளும் இல்லை.

ஆவா குழுவினால் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதாக, மக்கள் மத்தியில் அச்ச உணர்வை தூண்டுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

ஆவா குழு என்பது பாதாள உலக குழுவாகும். அவ்வாறான குழுவினால், தேசிய பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்திவிட முடியாது.

சிலர், இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு முனைகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *