மேலும்

ஜெனிவாவில் ஐ.நா குழுவின் விசாரணைகளால் திணறிய சிறிலங்கா பிரதிநிதிகள்

un-logoசிறிலங்கா இராணுவம், காவல்துறையினால் இழைக்கப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்படும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் நேற்று கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில் சிறிலங்கா தொடர்பான இரண்டு நாள் மீளாய்வு நேற்று ஆரம்பமானது.

நேற்று நடந்த இந்த மீளாய்வுக் கூட்டத்திலேயே சிறிலங்கா குழுவிடம், ஐ.நா நிபுணர்களால் சரமாரியான கேள்விகள் எழுப்பப்பட்டன.

பலஸ் வில்சனில் நேற்று நடந்த மூன்று மணிநேர அமர்வில், ஆட்கடத்தல்கள், இரகசிய தடுப்பு முகாம்கள், தடுப்புக்காவல் சித்திரவதைகள், தடுப்புக்காவல் மரணங்கள், ஏனைய மனித உரிமை மீறல்கள் குறித்த கேள்விகளை எழுப்பி, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் நிபுணர்கள் சிறிலங்கா தரப்பு குழுவைத் திணறடித்தனர்.

அத்துடன் புதிதாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் கைதுகள், தடுத்து வைப்பு, நீதிமன்றத்தில் நிறுத்தல் போன்றன தொடர்பாக இடம்பெறவுள்ள விதிகள் தொடர்பாகவும், ஐ.நா நிபுணர்கள் கேள்விகளை எழுப்பினர்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உறுப்பினரான பெலிஸ் காயர், ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.

அத்துடன் மாலியில் ஐ.நா அமைதிப்படையில் நிறுத்தப்படவுள்ள சிறிலங்கா படையினர் தொடர்பாக எத்தகைய பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ஐ.நா குழு உறுப்பினர்கள் சிறிலங்கா குழுவிடம் கேள்வி எழுப்பினர்.

சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் மற்றும், புலனாய்வுப் பிரிவுகள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைக் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை என்று ஐ.நா குழுவின் உறுப்பினரான பெலிஸ் காயர், குறிப்பிட்டார்.

தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரை 18 மாதங்கள் தடுத்து வைத்திருக்க முடியும் என்பது மிகவும் நீண்ட காலம் என்றும் ஐ.நா குழுவினர் குறிப்பிட்டனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்புமுகாம்களில், கொள்ளளவை விட, 200 தொடக்கம் 300 வீதம் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா நிபுணர் ஜுவான் மென்டிஸ் இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தில் கண்டறிந்துள்ளார் என்பதையும் ஐ.நா குழுவினர் சுட்டிக்காட்டினர்.

2015, 2016 காலப்பகுதியில், அதிகாரபூர்வமற்ற தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாகவும், ஐ.நா குழு சுட்டிக்காட்டியது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டு தொடக்கம், இதுவரையில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், சித்திரவதைகள் தொடர்பான 628 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கையை விட இது பத்து மடங்கு அதிகம் என்று பெலிஸ் கோயர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஐ.நா குழுவினர் கேட்டனர்.

காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக 170 முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதிலும், 24 சம்பவங்கள் குறித்தே சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாகவும் ஐ.நா குழுவினர் சுட்டிக்காட்டினர்.

ஐ.நா குழுவின் சிறிலங்கா குறித்த இந்த மீளாய்வு இன்றும் தொடரவுள்ளது.

ஐ.நா குழு எழுப்பிய கேள்விகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று பதிலளிக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சிறிலங்கா குழுவுக்கு சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமை தாங்குகிறார்.

அத்துடன் ஐ.நாவுக்கான சிறிலங்கா பிரதிநிதிகளான ரவிநாத ஆரியசிங்க, ரொகான் பெரேரா, மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ்,  காவல்துறை சட்டப்பிரிவின் பணிப்பாளர் அஜித் ரோகண ஆகியோரும் இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தரப்பில் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *