மேலும்

சிறிலங்கா புலனாய்வு தலைவரை ஐ.நா குழு விசாரிக்க வேண்டும் – ஊடக அமைப்புகள் கோரிக்கை

dig-sisira-mendisஜெனிவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவில் சார்பில் பங்கேற்பது குறித்து ஆர்எஸ்எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், ஜேடிஎஸ் எனப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்காவில் உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மோசமான குற்றங்கள் இழைத்ததாக குற்றம்சாட்டப்படும், தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ், ஜெனிவாவில் நடக்கும் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு கூட்டத்தில், சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருக்கிறார் என்பது ஏமாற்றத்தைத் தருகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில், 2008 மார்ச் தொடக்கம், 2009 ஜூன் வரையான காலப்பகுதியில், பிரதி காவல்துறை மா அதிபர் மென்டிசின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவு,  பயங்கரவாத தடுப்பு பிரிவு என இரண்டு பிரிவுகள் இருந்தன.

மென்டிஸ் தலைமை தாங்கிய காலப்பகுதியில், இந்த இரண்டு பிரிவுகளும், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மென்டிசின் தலைமையின் கீழ் இருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு,  பயங்கரவாத தடுப்பு பிரிவு என்பனவற்றினால், பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கடத்திச் செல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் உள்ளனர்.

தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடினர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு மோசமாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர்களில், ஜே.எஸ்.திசநாயகம், ஜசிகரன் அவரது மனைவி வளர்மதி, கே.விஜேசிங்க ஆகியோரும் அடங்குவர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியவற்றினால், மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான மீறல்களுக்கு பொறுப்பாக இருந்த சிசிர மென்டிசிடம், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேள்விகளை எழுப்ப வேண்டும்.

தனது கண்காணிப்பில் இருந்த இந்த பிரிவுகளால் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கள் குறித்து, ஏதும் தெரியாது என்றும் சிசிர மென்டிசினால் மறுக்க முடியாது.

ஏனென்றால், தடுப்பில் இருந்த போது மோசமாக நடத்தப்பட்டவர்கள் தொடர்பான நம்பகமான சான்றுகள் எம்மிடம் உள்ளன” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *