மேலும்

ஆவா குழுவை சிறிலங்கா இராணுவம் உருவாக்கியதாக கூறவில்லை – ராஜித சேனாரத்ன

rajitha senaratneயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை சிறிலங்கா இராணுவத்தினரே உருவாக்கினர் என்று தான் கூறவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“ ஆவா குழுவை உருவாக்கியதற்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரும், முன்னாள் பாதுகாப்புச் செயலருமே பொறுப்பு என்று மட்டுமே நான் கூறினேன்.

இதில் இராணுவம் தொடர்புபட்டுள்ளது என்று நான் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை.

ஆவா குழு பற்றிய மேலும் பல தகவல்கள்  விரைவில் வெளியிடப்படும்.

நான் இராணுவத்தை அவமதித்திருப்பதாக கோத்தாபய ரராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றமிழைத்தவர்களை போர் வீரர்கள் என்று கூறுவது வேடிக்கையான விடயம்.

லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, ஜோசப் பரராஜசிங்கம், ஆகியோரைக் கொலை செய்தவர்களைக் கூட, போர் வீர்கள் என்று கூறுகிறார் கோத்தா.

சில அதிகாரிகள் இதுபோன்ற குற்றங்களை இழைத்துள்ளனர். இதனைக் கூறினால், இராணுவத்தை அவமதிப்பதாக அர்த்தமில்லை.

ஆவா குழுவுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவும் மறுத்துள்ளார்கள்.

இராணுவத்தை யாரும் குற்றம்சாட்டாத போது, அவர்கள் ஏன்று மறுப்புத் தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை.

முன்னைய ஆட்சிக்காலத்தில் வடக்கில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே பொறுப்பு என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *