மேலும்

ஆவா குழுவை கோத்தாவே உருவாக்கினார் – அமைச்சர் ராஜித தகவல்

rajitha-senarathnaவடக்கில் செயற்படும் ஆவா குழுவை சில இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான் உருவாக்கினார் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு இந்தக் குழுவை உருவாக்கியதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம்.

ஆனால், அமைதியான தற்போதைய காலகட்டத்தில் இந்தக் குண்டர்களும் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

தமது அரசியல் ஆதாயத்துக்காக இந்தக் குழுவை உருவாக்கியவர்களே, வடக்கில் அமைதியைக் குழப்பவும், பிரச்சினைகளை ஏற்படுத்தவும் இந்தக் குழுக்களை மீண்டும் செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வர முனைகின்றனர்.

ஆவா குழுவை உருவாக்கியது புலம்பெயர் தமிழர்கள் அல்ல. அவர்களுக்கு இதில் தொடர்புகள் இல்லை.

போர்க்காலத்தில் தான் இந்தக் குழு வடக்கில் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிய பிரிகேடியர் யார் என்பது எனக்குத் தெரியும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் தான் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

அவர்கள் இப்போது இந்தக் குழுவை வைத்து வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

இந்தக் குழுக்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, தங்குமிடம், ஆயுதங்கள், உந்துருளிகளை இவர்களே வழங்கினார்கள். எனவே அந்தக் குழுவினர் இப்போது, அவர்களின் உத்தரவுகளின் கீழ் செயற்படுகிறார்கள்.

முன்னாள் பாதுகாப்புச் செயலரும், இராணுவத்தில் உள்ள அவரது அனுதாபிகளும்  அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு, இந்த விடயத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகிறார்கள்.

முன்னைய அரசாங்கத்துக்கு எதிரானவர்கள், தமிழ் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காகவே வடக்கில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

இந்தக் குழுவுடன் முன்னாள் புலிப் போராளிகள் சம்பந்தப்படவில்லை. அவர்களுக்கு இதில் தொடர்புகள் இல்லை.

அரசியல் நோக்கத்துக்காகவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  விரைவில் இதற்கு முடிவு கட்டப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *