மேலும்

இந்திய நாடாளுமன்றத்துக்கு வருகிறது அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் சட்டமூலம்

India-emblemஅகதிகளுக்குப் புகலிடம் அளிப்பது தொடர்பான சட்டமூலம் இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் சட்டமூலம், 2015ஆம் ஆண்டு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாரூரால், தனிநபர் பிரேரணையாக முன்வைக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலம் வரும் நொவம்பர் 16ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள  இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அகதிகள் மற்றும் புகலிடம் தேடி வருவோரை ஒரு பொருத்தமான சட்ட வரையறைகளுக்குள் காத்திரமான முறையில் பாதுகாப்பதை நோக்காகக் கொண்டு இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெருமளவு அகதிகளை கொண்டுள்ள இந்தியா, அடைக்கலம் கோருவோர் பிரச்சினை தொடர்பான ஒரு தெளிவான சட்டத்தைக் கொண்டிருக்கவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு, புதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்டமூலத்தின் கீழ், அடைக்கலம் கோருவோரின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். இதன் கீழ் தலைமை ஆணையாளர் மற்றும் ஆறுக்கும் குறையாக ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 2,01,281 அகதிகளும், 6480 புகலிடக் கோரிக்கையாளர்களும் தங்கியிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பு தெரிவித்திருந்தது.

தெற்காசியாவில் அதிகளவு அகதிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியாவில் சிறிலங்கா, திபெத், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அகதிகள் அதிகளவில் வாழ்கின்றனர்.

இந்தியாவில் முறைசார் அகதிக் கொள்கை இதுவரை இல்லாத நிலையில், அகதிகளின் விண்ணப்பத்தின் அடிப்படையில் அடைக்கலம் வழங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *