மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்றுகிறது சீனா

Hambantota harborநாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீன நிறுவனத்துக்கு விற்கப்படவுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட பயணத்தின் போது முன்வைத்த திட்டத்தை அடுத்தே, அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீன நிறுவனத்துக்கு கைமாறவுள்ளது.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக  சீனாவிடம் பெறப்பட்ட 8 பில்லியன் டொலர் கடனுக்காக, அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் உரிமையை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டத்தை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நடந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க,

“அம்பாந்தோட்டையை சீனர்கள் போன்ற சிலர் பட்டுப்பாதை பரிமாற்ற மையமாக விரும்புகின்றனர்.

எனவே, 1 பில்லியன் டொலருக்கு மேல் பெறுமானமுள்ள உடன்பாடு ஒன்றுக்கு அமைய, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத பங்குகள் சீன நிறுவனத்துக்கு விற்கப்படவுள்ளன.

நொவம்பர் இரண்டாம் வாரத்தில் இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்படும்.

துறைமுகத்தை இயக்கவுள்ள சீன முதலீட்டாளருக்கு 80 வீத பங்குகள் வழங்கப்படும். இந்த உடன்பாட்டின் மூலம் பெறப்படும் நிதி, வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.

அதேவேளை அம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயத்தை உருவாக்குவதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

மிக விரையில் இந்த முதலீட்டு வலய உடன்பாடு கையெழுத்திடப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையைப் பெறவுள்ள சீன நிறுவனத்தின் பெயரை வெளியிட சிறிலங்கா நிதியமைச்சர் மறுத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *