மேலும்

பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு முக்கிய பதவி

defence-seminar-2016பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மட்டப் பதவியை ஒன்றை உருவாக்குவதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் இராணுவத் தரப்புகள் மீது அண்மையில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளினால் ஏற்பட்டுள்ள கரிசனைகளை அடுத்தே, இந்தப் புதிய பதவியை உருவாக்குவது குறித்து சிறிலங்கா அதிபர் ஆராய்ந்து வருகிறார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள், கொலைகள் தொடர்பாக சிறிலங்கா படையினர் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விவகாரங்களைக் கையாள்வற்காக, நம்பிக்கையான ஒருவரை பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்க சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

ஐதேகவில் போட்டியிட்ட முக்கிய அமைச்சர் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பாதுகாப்பு அமைச்சு சிறிலங்கா அதிபராலேயே கையாளப்பட வேண்டும்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரே ஐ.நாவுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் நெருக்கமானதும் காத்திரமானதுமான தொடர்புகளை வைத்திருக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய பதவி உருவாக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபரால், இந்த விவகாரத்தில் நேரடியாக ஈடுபடுவது நடைமுறைச்சாத்தியமற்றதாகும். அவருக்கு பல்வேறு பணிச்சுமைகள் இருப்பதால், பாதுகாப்புப் படைகளை நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

அத்துடன், கடந்தகால அரசியல் அனுபவத்தில் அடிப்படையில் இந்தப் புதிய பதவி உருவாக்கப்படவுள்ளது.

சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலத்தில், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அதிகாரபூர்வமற்ற பாதுகாப்பு அமைச்சராக விளங்கினார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதிபராக இருந்த காலத்தில், தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லலித் அத்துலத் முதலியும், பிரேமதாச அதிபராக இருந்த போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்னவும், பாதுகாப்பு விவகாரங்களைக் கையாண்டிருந்தனர்.

சந்திரிகா குமாரதுங்க அதிபராக இருந்த போது, பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான அனுருத்த ரத்வத்தையும், மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கோத்தாபய ராஜபக்சவும், பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.

தற்போதைய அரசாங்கத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக உள்ள ருவான் விஜேவர்த்தன சிறிலங்கா அதிபர் எதிர்பார்த்தளவுக்கு போதிய செயற்திறன் வாய்ந்தவராக இல்லாதிருப்பதாலேயே புதிய பதவியை உருவாக்கத் திட்டமிடப்படடுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *