மேலும்

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஜெய்சங்கர் – பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து பேச்சு

ms-jaishankarசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்றுக்காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, போக்குவரத்து, சக்தி, மற்றும் உட்கட்டமைப்பு துறைகளில் இந்திய- சிறிலங்கா ஒத்துழைப்பு திட்டங்களை முன்னெடுப்பது குறித்தே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பு 20 நிமிடங்களே நீடித்ததாகவும், பொருளாதார இராஜதந்திர முன்முயற்சிகள் தொடர்பாகவே இதன்போது பெரிதும் கவனம் செலுத்தப்பட்டதாகவும், சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய வெளிவிவகாரச் செயலர் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலருடன், இந்திய அரசுத்துறையைச் சேர்ந்த, எரிவாயு உற்பத்தி நிறுவனமான கெய்ல் (GAIL), போக்குவரத்து உட்கட்டமைப்பு நிறுவனமான ரைட்ஸ்(RITES), மின்சக்தி உட்கட்டமைப்பு நிறுவனமான தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC), மற்றும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOC) ஆகியவற்றின் அதிகாரிகள் குழுக்களும் கொழும்பு வந்துள்ளன.

அத்துடன் இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் குழுவொன்றும் இந்திய வெளிவிவகாரச் செயலருடன் வந்துள்ளது.

இன்று இந்தக் குழுவினர் துறை சார்ந்த மட்டத்தில் சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

மின்சக்தித் துறையில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தல், திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியங்களை அபிவிருத்தி செய்தல், பலாலி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் ஏனைய திட்டங்கள் தொடர்பாகவே இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

பிரிக்ஸ் மாநாட்டில் சிறிலங்கா அதிபரைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சம்பூரில் அனல் மின் திட்டத்துக்குப் பதிலாக சூரிய மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியா தயார் என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சந்திப்புக்கு ஒருவாரம் கழித்து இந்திய வெளிவிவகாரச் செயலர் கொழும்பு வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *