மேலும்

உண்மை கண்டறியும் குழுவை யாழ்ப்பாணம் அனுப்புகிறது தேசிய காவல்துறை ஆணைக்குழு

jaffna-shooting-1அண்மையில் இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பாக உண்மை கண்டறியும் அதிகாரிகள் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் இன்று இந்தக் குழு யாழ்ப்பாணம் செல்லும் என்றும், மாணவர்களின் மரணம் தொடர்பாக அந்தக் குழு கலந்துரையாடல்களை நடத்தும் என்றும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

“மாணவர்களின் மரணம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்குப் புறம்பாக, இந்த உண்மை கண்டறியும் குழுவின் விசாரணைகள் இடம்பெறும்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து, அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது காவல்துறை மா அதிபரின் பொறுப்பாகும்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவைச் சேர்ந்த குழு உண்மை கண்டறியும் பயணத்தை மாத்திரமே மேற்கொள்ளும்.” என்றும் அவர் ஆரியதாச குரே கூறியுள்ளார்.

மாணவர்களின் மரணம் விபத்தினால் ஏற்பட்டது என்று சிறிலங்கா காவல்துறை மூடி மறைக்க முயன்றிருந்தது. எனினும், உடற்கூற்றுப் பரிசோதனையில், உந்துருளியைச் செலுத்திச் சென்ற மாணவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானதும், மற்றைய மாணவன் விபத்தில் மரணமானதும் உறுதியானது.

இதையடுத்து. சிறிலங்கா காவல்துறையினர் ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *