மேலும்

சர்ச்சைகளில் சிக்கிய மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு

army-officersசிறிலங்கா இராணுவத்தின் ஒன்பது பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அங்கீகாரத்துடன் கடந்த 20ஆம் நாள் தொடக்கம் ஒன்பது பிரிகேடியர்களும், பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Brigadiar_Aruna_Wanniarachchi

அருண வன்னியாராச்சி

பிரிகேடியர் அஜித் ரூபசிங்க, பிரிகேடியர் சுனில் வன்னியாராச்சி, பிரிகேடியர் சரத் வீரவர்த்தன, பிரிகேடியர் ஹரேன் பெரேரா, பிரிகேடியர் ருவான் சில்வா, பிரிகேடியர் ரால்ப் நுகேர,  பிரிகேடியர் அருண வன்னியாராச்சி, பிரிகேடியர் நிசாந்த வன்னியாராச்சி, பிரிகேடியர் மனோஜ் முத்தநாயக்க ஆகியோரே மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களாவர்.

இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய அதிகாரிகள் சிலரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டிருக்கின்றனர்.

ரால்ப் நுகேர

ரால்ப் நுகேர

லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவங்களுடன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு தொடர்புபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், இந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் அருண வன்னியாராச்சியும் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இவர் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை சந்தித்து வருகிறார். கடந்த வாரமும் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்பட்டிருந்தார்.

நிசாந்த வன்னியாராச்சி

நிசாந்த வன்னியாராச்சி

அதேவேளை, இறுதிக்கட்டப் போரில் ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்பு தெற்கு வரை முன்னேறிய – சிறிலங்கா இராணுவத்தின் 64ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் நிசாந்த வன்னியாராச்சிக்கும், இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் ரால்ப் நுகேராவுக்கும் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் மற்றும் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிக்கும் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *