மேலும்

அடுத்த ஆண்டிலும் பாதுகாப்புக்கே அதிக நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சுக்கு பெரும் வெட்டு

sri-lanka-emblemஅடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2017ஆம் ஆண்டில் 1,819 billion ரூபா, (1,819,544,000,000 ரூபா) மொத்த செலவினம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டின் கடன் வரம்பு, 1,489 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பாதுகாப்பு செலவினங்களுக்கான ஒதுக்கீடு சுமார் 284 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இதில் 251 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவினம் என்றும், 32.2 பில்லியன் ரூபா முதலீட்டு செலவினம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பாதுகாப்புக்கான 306 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 257.6 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவினமாகவும், 48.9 பில்லியன் ரூபா மூலதனச் செலவினமாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்த படியாக நிதியமைச்சுக்கு 242.8 பில்லியன் ரூபாவும், மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சுக்கு 214.1 பில்லியன் ரூபாவும், பொதுநிர்வாக முகாமைத்துவ அமைச்சுக்கு 165.2 பில்லியன் ரூபாவும், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 163.4 பில்லியன் ரூபாவும், சுகாதார அமைச்சுக்கு 160.9 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 76.9 பில்லியன் ரூபாவும், ஒதுக்கீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 185.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட கல்வி அமைச்சுக்கு அடுத்த ஆண்டில், 78.9 பில்லியன் ரூபாவே ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடு, 2.3 பில்லியன் ரூபாவில் இருந்து 7.4 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வரும் 20ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *