மேலும்

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கிறது இந்தியா

trincoநாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் பீப்பாய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை திருகோணமலையில் இந்தியாவின் உதவியுடன் நிறுவவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத் தாபனத் தலைவர் ரி.ஜி.ஜெயசிங்க,  இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (ஐஓசி) இணைந்து திருகோணமலையில் நிறுவப்படவுள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் ஏற்றுமதியை நோக்காக கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவ வழக்கமாக நான்கு ஆண்டுகள் செல்லும் என்று அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் சேமிப்பதற்கான குதங்கள் அங்கு ஏற்கனவே உள்ளன. சீனக்குடாவில் உள்ள பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட 99 எண்ணெய்க் குதங்களில், 15 குதங்களை இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா ஐஓசி பயன்படுத்தி வருகிறது.

லங்கா ஐஓசி நிறுவனம், 2001ஆம் ஆண்டு சீனக்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்களை 30 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருந்தது. தற்போது அந்த பயன்படுத்தாமல் உள்ள 84 எண்ணெய்க் குதங்களை புனரமைப்பதற்கு அந்த நிறுவனத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேட்டுள்ளது.

உலகின் இரண்டாவது ஆழமான இயற்கைக் துறைமுகமான திருகோணமலையை எரிகொருள் கேந்திரமாக உருவாக்க இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு உறுதிஅளித்திருந்தார்.

சிறிலங்காவில் தற்போது சபுகஸ்கந்தையில் உள்ள ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையே இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பீப்பாய் ஈரானிய மசகு எண்ணெயை மாத்திரமே சுத்திகரிக்க முடியும்.

ஈரான் மீது எண்ணெய் ஏற்றுமதித் தடையை அமெரிக்கா விதித்திருந்த காலகட்டத்தில், சிறிலங்கா சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளையே வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியது.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் அமைக்கப்படவிருக்கும் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு ஏற்படும் செலவுகள் இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்று சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

அதேவேளை சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் மின் திட்டத்தை, இயற்கை எரிவாயு மின் நிலையத் திட்டமாக மாற்றுவதற்கும் இந்தியா இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை சிறிலங்கா பிரதமருடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கு கடந்த ஓகஸ்ட் மாதம், சீனாவும் அமெரிக்காவும் விருப்பம் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *