மேலும்

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்கும் முயற்சிகளை புதுப்பிக்குமா பாகிஸ்தான்?

SLAF-PAF-chiefsஇரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ள நிலையில், ஜேஎவ்-17 போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்கும் முயற்சிகளில் பாகிஸ்தான மீண்டும் இறங்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியை, சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள வரவேற்றார்.

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார்.

SLAF-PAF-chiefs

இந்த நிலையில், சிறிலங்கா விமானப்படைக்கு ஜேஎவ்-17 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுக்கலாம் என்று இந்தியத் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜேஎவ்-17 போர் விமானங்களை பாகிஸ்தானிடம் வாங்கும் சிறிலங்காவின் திட்டத்தை இந்தியா தலையிட்டு இடைநிறுத்தியிருந்தது.

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் சிறிலங்கா பயணம் தொடர்பாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தப் பயணம் தற்போதைய ஒத்துழைப்பு மற்றும் கூட்டு தொடர்பாக மீளாய்வு செய்வதற்கும்,  இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உயர்த்துவதற்கும் வாய்ப்பாக அமையுமய் என்று கூறப்பட்டிருந்தது.

இங்கு ஒத்துழைப்பை“உயர்த்துவது“ (Enhancement of cooperation)  என்பது, பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா கொள்வனவு செய்வதையே அர்த்தப்படுத்துவதாக இருக்கக்கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் 400 மில்லியன் டொலர் நிதியில், சீன-பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பான, ஜேஎவ்-17 போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்பதற்கு, 2015ஆம் ஆண்டு இறுதியிலும், 2016ஆம் ஆண்டு தொடக்கத்திலும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், மூலோபாய அடிப்படையில் தனது செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதி என்பதால், இந்தியா இதற்குக் குறுக்கே நின்றதால், இந்த முயற்சி தோல்வியடைந்தது.

காஷ்மீரில் ஒரு மாதமாக நீடித்து வரும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்று கருதும் இந்தியா, ஜேஎவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக சிறிலங்கா- பாகிஸ்தான் இடையே உடன்பாடு புதுப்பிக்கப்பட்டால், இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *