மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வர அமெரிக்கா வலியுறுத்தல்

atul-keshapசிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்று கொழும்பில், நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இதனைத் தெரிவித்தார்.

“தம்மை தெரிவு செய்த குடிமக்களுக்கு நம்பகமாக அரசாங்க அதிகாரிகள் இருக்க வேண்டும் என ஜனநாயகம் கோருகிறது. அந்த நம்பகத்தன்மைக்கு வெளிப்படைத் தன்மை அவசியம்.

கடந்த ஆண்டு சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர்,  உறுதியளித்ததைப் போன்று, மிக முக்கியமான நல்லாட்சி மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் வாக்குறுதிகளில் நீங்கள் தேர்ச்சி எட்டும் போது அமெரிக்கா ‘உங்கள் பக்கம்’ இருக்கும்.

கடந்த 16 மாதங்களில் எமது அதிகரித்த ஒத்துழைப்பில் பிரதிபலித்தவாறு, எமது இராஜதந்திர உறவுகள் ஒருபோதும் இல்லாதவாறு உயர்ந்த நிலையில் இருக்கின்றன.

சிறிலங்கா  முழுவதிலும் மோதலுக்குப் பின்னரான நிலையான அமைதியை உருவாக்குவதற்கும் எமது முயற்சிகள் உதவுகின்றன. சட்டம் ஒழுங்கினை வலுப்படுத்துவதற்கும், வலுவான சிவில் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும், மற்றும் ஜனநாயகத்தையும், செழுமையையும் வலுப்படுத்துவதற்கும் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் ஆதரவளிக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பொது நிதி முகாமைத்துவம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத்தை இலக்கு வைத்த உதவிகளின் ஊடாக மறுசீரமைப்புக்களுக்கு நாம் தற்போது உதவுகிறோம்.

உலகின் எந்தப் பகுதியிலும் நல்லாட்சியை வலுப்படுத்தும் கடமை இலகுவானது இல்லை. சட்டத்தில் குடிமக்களின் தகவலுக்கான உரிமையை உள்ளடக்குவது, சரியான வழியில் செல்வதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும்.

தமது நாட்டை சிறந்த இடமாக்குவதற்கும், இரகசியம், நம்பகத் தன்மை குறைந்த யுகத்திற்கு திரும்புவதனை தடுப்பதற்கான கருவிகளை அவ்வாறான சட்டம் இலங்கையர்களுக்கு வழங்கும்.

சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் புதிய சூழல், தேவையான மாற்றங்களை கொண்டு வருவதற்கான அரிய சந்தர்ப்பத்தை தருகிறது.

புதிய தேசிய பாதுகாப்பு சட்ட கட்டமைப்பு ஒன்றினால் பழைமையான பயங்கரவாத சட்டத்தை மாற்றுவது, எதிர்கால துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கு மாத்திரமன்றி,சிறிலங்காவுக்கும், அதன் ஜனநாயகத்திற்கும், குடிமக்கள் உரிமைகளுக்குமான நவீன அச்சுறுத்தல்களுக்கும் எதிரான வலுவான பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கு சாதாரண மக்கள்  மற்றும் சிவில் சமூகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

காணாமல் போனவர்களுக்கான செயலகம் உருவாக்கம் மற்றும் வேறு பயனுள்ள படிநிலைகள் உள்ளடங்கலாககாயங்களை ஆற்றுவதற்கான உறுதியான தேர்ச்சியை நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

மோதலுக்குப் பின்னரான நிலைமாற்றத்திற்கு புத்தாக்க தீர்வுகளுடன், தமது ஐ.நா. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் ஜனநாயக மாதிரியாக, மோதலின் பின்னர் சிறிலங்கா உண்மையில் மீண்டும் உலக தளத்திற்கு வந்துள்ளது.

உலக பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் மனித உரிமைகள், நம்பகத் தன்மை, நிலைமாற்று நீதி மற்றும் ஜனநாயகத்தை முன்னிறுத்தும், மற்றும் அனைத்துலக சட்டத்தை மதிக்கும், அனைத்துலக சமூகத்தில் தலைவராக சரியான இடத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகளில், மேலதிக ஆதரவினை வழங்குவதற்கு, மேலதிக நிபுணத்துவத்தை பகிர்வதற்கான சந்தர்ப்பங்களையும் அமெரிக்கா எதிர்பார்த்திருக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *