மேலும்

நீர்மூழ்கிகளின் போர்க்களமாகும் இந்திய மாக்கடல் – சிறிலங்காவின் வகிபாகம் என்ன?

china-submarineஇந்த உடன்பாடானது மூலோபாயப் பங்காளியாக எந்தவொரு உலகின் பாரிய சக்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை என்கின்ற இந்தியாவின் அடிப்படைக் கோட்பாட்டை ஆட்டங்காணச் செய்துள்ளது. இது இந்தியாவின் பாரியதொரு கோட்பாட்டு மாற்றத்திற்கான சமிக்கையாகக் காணப்படுகிறது.

இவ்வாறு டெய்லி மிரர் நாளிதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஒக்ரோபர் 31, 2014 அன்று சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் போர்க் கப்பல் ஒன்றும் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. மிகவும் அமைதியாக இருந்த சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகமானது, இவ்விரு இராணுவக் கப்பல்களின் வருகையாலும் பல்வேறு விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தது.

சீனக் கப்பல்களின் வருகையானது இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் அமெரிக்காவின் ஆசியக் கடற்பிராந்தியம் மீதான செல்வாக்கிற்கும் ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பியது.

இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலான சங்க்செங்க்-2 மற்றும் போர்க்கப்பலான சிங்க் டாவோ போன்றன கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றமையானது பல்வேறு சந்தேகத்தைத் தோற்றுவித்தது. இந்திய மாக்கடலில் சீனா தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு அங்கமாக சிறிலங்காவைப் பயன்படுத்துகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக ஒரு சாட்சியமாக இவ்விரு போர்க் கப்பல்களின் வருகையும் விளங்கியது. குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த சீனாவின் இரண்டாவது நீர்மூழ்கிக்கப்பலாக சங்க்செங்க் – 2 விளங்குகிறது.

செப்ரெம்பர் 2014ல் சீன நீர்மூழ்கிக்கப்பலானது முதன் முதலாக சிறிலங்காவின் துறைமுகத்தில் தரித்து நின்ற போது, சீனாவின் அதிபர் சி ஜின்பிங்கின் சிறிலங்காவிற்கான வருகையை ஒட்டிய பாதுகாப்பு ஏற்பாட்டை நோக்காகக் கொண்டது என சிறிலங்கா தெரிவித்திருந்தால், இது அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விமர்சனத்திற்கும் அதிருப்திக்கும் அச்சத்திற்கும் உள்ளாகாது இருந்திருக்கும்.

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பில் இந்தியா அச்சமுற்றதற்கு பிறிதொரு காரணமும் உள்ளது. இராணுவக் கப்பல்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சீனா தனது யுத்தக் கப்பலைத் தரித்து நிறுத்தவில்லை, மாறாக சீனர்களால் வடிவமைக்கப்பட்ட கப்பல் தரிப்பிடத்தில் இது தரித்து நிறுத்தப்பட்டமையே இந்தியாவின் அச்சத்திற்கான பிறிதொரு காரணமாகும். ‘இது அசாதாரண விடயமல்ல. ஏனெனில் 2010லிருந்து, 230 போர்க் கப்பல்கள் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் பல்வேறு தேவைகளுக்காகத் தரித்து நின்றுள்ளன. குறிப்பாக இவை தமக்கான எரிபொருட்களை நிரப்புவதற்கும், ஒய்வெடுப்பதற்காகவும் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றுள்ளன’ என சிறிலங்காவின் அப்போதைய கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

‘வெளிநாட்டுத் துறைமுகங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவும் ஓய்விற்காகவும் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நிறுத்தப்படுவது அனைத்துலக பொதுவான நடைமுறையாகும்’ என சீனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. ஆனாலும் இவ்வாறான அறிவித்தல்கள் எவையும் இந்தியாவைச் சமாதானப்படுத்தவில்லை. கொழும்புத் துறைமுகத்தில் சீனப் போர்க் கப்பல்கள் தரித்து நிறுத்தப்பட்டது தொடக்கம் இந்தியா தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கும் அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

2015 ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது சீனாவின் சிறிலங்கா மீதான ஈடுபாடு தொடர்பாக ஏற்பட்ட வதந்தியை இல்லாதொழிக்கும் முகமாக இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது. சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது சீனாவுடனான தொடர்பைக் குறைத்தது.

ஆனால் இந்த அரசாங்கம் சீனாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு ஆண்டில் சீனாவுடன் விரோதம் கொள்வதால் எவ்வாறான விளைவை அனுபவிக்க வேண்டியேற்பட்டது என்பதை உணரத் தொடங்கியது. ஏனெனில் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதால் இதன் முதலீட்டையோ அல்லது உதவியையோ சிறிலங்காவால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

சிறிலங்கா நலிந்து போயுள்ள தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக மீண்டும் சீனாவுடன் உதவியைக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சிறிலங்கா மீண்டும் சீனாவுடன் பொருளாதார உறவைக் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளது. இது மீண்டும் உலகின் சக்தி மிக்க நாடுகள் மத்தியில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்ட சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது தற்போது மீண்டும் தொடர்வதற்கான அனுமதியை சிறிலங்கா வழங்கியுள்ளது.

சிறிலங்காவின் பூகோள அரசியல் அமைவிடத்தைக் கருத்திற் கொண்டே இந்த உறவானது மீண்டும் நெருக்கமாகியுள்ளது. இதனால் சீனா, சிறிலங்காவைப் பயன்படுத்தி இந்திய மாக்கடலில் தனது நிலைப்பை உறுதிப்படுத்துவதுடன், இதனால் இந்தியாவிற்கும் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவும் அமெரிக்காவும் அண்மை மாதங்களில் சீனாவின் அச்சுறுத்தல் தொடர்பாக மீண்டும் பேச்சுக்களை நடத்தி வருகின்றன. இந்திய மாக்கடலில் இரு நாடுகளினதும் நீர்மூழ்கிக் கப்பல்களை தரித்து நிறுத்துவதற்கான இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு உடன்பாட்டை மேற்கொள்வதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவை அமெரிக்காவின் மூலோபாயப் பங்காளியாக்குவதற்கான நோக்குடன் கடந்த மாதம் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் அஸ்ரன் கார்டர் புதுடில்லிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக இவர் தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியாவின் ஆழ்கடல் கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் விமானத் தாங்கி போன்றவற்றைக் கொண்டுள்ள இந்தியாவின் கிழக்குக் கடற்படைத் தலைமையத்திற்குப் பயணம் செய்திருந்தார்.

கார்டரின் இப்பயணத்தின் போது, இரு தரப்பினரும் இரு நாடுகளினதும் கடற்படைகள் பரஸ்பரம் இருநாட்டுக் கடற்படை வளங்களையும் பயன்படுத்துவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டன. குறிப்பாக இவ்விரு நாடுகளும் பரஸ்பரம் இரு நாட்டினதும் கடற்படை, தரைப்படை மற்றும் வான்படைத் தளங்களைப் பயன்படுத்துவதுடன், ஆயுதங்களை மீள்வழங்குவதற்கான தயார்ப்படுத்தல்களையும் மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.

இந்த உடன்பாடானது மூலோபாயப் பங்காளியாக எந்தவொரு உலகின் பாரிய சக்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை என்கின்ற இந்தியாவின் அடிப்படைக் கோட்பாட்டை ஆட்டங்காணச் செய்துள்ளது. இது இந்தியாவின் பாரியதொரு கோட்பாட்டு மாற்றத்திற்கான சமிக்கையாகக் காணப்படுகிறது. இந்தியாவானது நீண்ட காலமாக அணிசேராக் கொள்கையைக் கொண்டிருந்த போதிலும், தற்போது தனது வெளியுறவுக் கோட்பாட்டை நடுநிலையாக்கி தொடர்ந்தும் உலக அரங்குகளில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைத் தலைமை ஏற்பதற்கான கோட்பாட்டை நிறுவுவருகிறது.

தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா,  அமெரிக்காவுடன் ஆயுதத் தொழினுட்பத்தைப் பரிமாறிக் கொள்வதற்காகத் தனது இராணுவத் தளங்களைத் திறந்து விடுவதற்கான பாரியதொரு நகர்வை முன்னெடுத்துள்ளது. அதாவது இந்திய மாக்கடலில் சீனாவின் இருப்பை இல்லாதொழிப்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா நீர்மூழ்கிக் போர்க் கப்பல் தொழினுட்பத்திற்கு எதிரான தொழினுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதற்கு உடன்பட்டுள்ளன. இந்திய மாக்கடலின் தென்னாசியப் பிராந்தியத்தில் எந்தவொரு பிற சக்திகளும் செல்வாக்குச் செலுத்துவதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது.

ஆனால் தற்போது இந்தியப் பிராந்தியக் கடற்பிரதேசத்திற்கு அருகில் சீன நீர்மூழ்கிக்கப்பல்களின் பிரசன்னமானது புதுடில்லிக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் சராசரி நான்கு தடவைகள் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய மாக்கடலில் தரித்து நிற்பதாக இந்தியக் கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர். இவற்றுள் சில மலாக்கா நீரிணைக்கு அருகிலுள்ள இந்தியாவின் அந்தமான் தீவுகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தரித்து நிற்கின்றன. மலாக்கா நீரிணை தென்சீனக் கடலின் வாயிலில் அமைந்துள்ளது. இதன் ஊடாக சீனாவின் எரிபொருள் வழங்கலின் 80 சதவீத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கூட்டு நடவடிக்கையானது நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு எதிரான தொழினுட்பம் தொடர்பாக வடக்கு பிலிப்பீன் கடலில் இடம்பெறவுள்ளதாக இந்தியக் கடற்படை வட்டாரத்தை மேற்கோள் காட்டி ‘ரொய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இக்கூட்டுப் பயிற்சித் திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, யப்பான், பிலிப்பீன்ஸ் ஆகியவற்றுடன்,  சீனா இராணுவ அச்சுறுத்தல் மிக்கது எனக் கருதும், மற்றும் பிற நாடுகளும் இணையவுள்ளன.

இந்தியா தனது முதலாவது உள்நாட்டுத் தயாரிப்பான அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பலை வரும் வாரங்களில் பயன்பாட்டிற்கு விடவுள்ளது. இந்த அணுவாயுத நீர்மூழ்கிக்கு அனைத்து எதிரிகளையும் கொல்பவர் என்கின்ற கருத்துப்பட ‘ அரிகன்ட்’ எனப் பெயரிட்டுள்ளது. இது கடந்த மாதம் வங்காள விரிகுடாவில் வெற்றிகரமாக தனது அணுவாயுத ஏவுகணைப் பரீட்சையை மேற்கொண்டது. இதேபோன்று பிரான்சின் கடற்பாதுகாப்பு நிறுவனமான DCNS இனால் வடிவமைக்கப்பட்டு மும்பாயில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்கோப்பின் வகை இந்திய நீர்மூழ்கியான ‘கல்வாரி’ (புலித் திமிங்கிலம்) என்பது கடந்தவாரம் பரீட்சிக்கப்பட்டது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீர்மூழ்கி மற்றும் கண்காணிப்புச் செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. ‘இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பாரம்பரிய மையங்களான மலாக்கா நீரிணை மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்றவற்றைச் சூழவும் இந்தியாவின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவுடனான உறவே இந்தியா பாரியதொரு நீர்மூழ்கிச் செயற்பாட்டைப் புரிவதற்குத் துணைபுரிகிறது’ என சிங்கப்பூரின் எஸ்.ராஜரட்னம் பாடசாலையின் அனைத்துலக கற்கைக்கான நீர்மூழ்கி வல்லுனரான கொலின் கோ குறிப்பிட்டுள்ளார்.

நீர்மூழ்கி யுத்தத்திற்கான ஒரு மையமாக விளங்கும் இந்திய மாக்கடலிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது சிறிலங்காவிற்கும் தெரிந்திருக்க வேண்டும். இந்திய மாக்கடலின் இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா தனது கண்களை மூடிக்கொண்டு இருக்கமுடியாது. 1962ல் இடம்பெற்ற சீன-இந்திய யுத்தத்தில் சிறிலங்கா சமாதானச் செயற்பாட்டாளராகப் பங்கெடுத்தது. இவ்வாறானதொரு பங்களிப்பை சிறிலங்கா மீண்டும் மேற்கொள்ள முடியாதா?

1970களில், இந்திய மாக்கடலை ‘சமாதான வலயமாக’ ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறிலங்கா உலகளாவிய ரீதியில் பாரியதொரு பரப்புரையை மேற்கொண்டது. எல்லா நாடுகளுடனும் சிறிலங்கா நட்பைப் பேணினால், மீண்டும் தற்போது சீன-இந்திய யுத்தத்தின் போது மேற்கொண்ட சமாதானப் புறவாக சிறிலங்காவால் செயற்பட முடியாதா?

சிங்கப்பூரில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சங்கிரி –லா பாதுகாப்புப் பேச்சுக்களில் இதனை சிறிலங்கா முதன்மைப்படுத்த வேண்டும். சீனா, இந்தியா, யப்பான், அமெரிக்கா உட்பட அனைத்து பங்குதாரர்களும் இப்பேச்சுக்களில் பங்குபற்றுவர் என்பதால் இந்திய மாக்கடலில் எழுந்துள்ள அச்சுறுத்தல் தொடர்பாக சிறிலங்கா முதன்மைப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *